பத்தாங் பெர்ஜூந்தை, அக்டோபர் 17 – உடல் பேறு குறைந்த பத்திரிகையாளர் லோகநாதன் குல்லாயிரத்திற்கு இன்று தகவல் தொடர்பு துறை அமைச்சின் கீழ் Kasih@Hawana நிதியுதவி கிடைக்கப்பெற்றது.
மலேசிய தமிழ் பத்திரிகையாளர் சங்கம் மற்றும் பெர்னாமா மேற்கொண்ட முயற்சியின் பலனாக, முன்னாள் தமிழ்நேசன் – மலேசிய நண்பன் பணியாளரான லோகநாதனுக்கு அவ்வுதவி கிட்டியது.
தகவல் தொடர்பு துறை அமைச்சின் பெர்னாமாவின் கீழ் இயங்கும் காசோ அவனா திட்டத்தின் கீழ் உதவும் படி மலேசிய தமிழ் பத்திரிகையாளர் சங்கம் முன் வைத்த கோரிக்கையை அமைச்சு உடனடியாக ஏற்றுக் கொண்டது.
அதனைத் தொடர்ந்து, அவரின் வீட்டிற்கு நேரடியாக வருகை புரிந்த தகவல் தொடர்பு துறை துணை அமைச்சர் தியோ நி சிங் நலம் விசாரித்து அந்த நிதியுதவியை வழங்கினார்.
மேலும் தீபாவளியை முன்னிட்டு பரிசு கூடைகளையும் வழங்கி லோகநாதனுக்கு தீபாவளி வாழ்த்துகளை தெரிவித்துக் கொண்டார்.
மலேசிய தமிழ் பத்திரிகையாளர் சங்கத்தின் உறுப்பினருக்கு உதவிக்கரம் நீட்டிய தகவல் தொடர்பு துறை அமைச்சுக்குச் சங்கத்தின் தலைவர் முத்தமிழ் மன்னன் நன்றியைத் தெரிவித்துக் கொண்டார்.
இந்த நிதியுதவி விரைந்து கிடைக்க பேருதவி புரிந்த பெர்னாமா செய்தி நிறுவனத்தின் தலைமை இயக்குநர் அருள் குமாருக்கும், தனது மனமார்ந்த நன்றியை மலேசிய தமிழ் பத்திரிகையாளர் சங்கம் தெரிவித்துக் கொண்டது.