கோலாலம்பூர், அக்டோபர்-19 – கோலாலம்பூர், பிரிக்ஃபீல்ட்ஸ் பகுதியில் தீபாவளி சந்தையில் வியாபாரம் செய்ய முடியாமல் போன 10 வியாபாரிகளுக்கு, கூட்டரசு பிரதேச அமைச்சர் Dr சாலிஹா முஸ்தாஃபாவின் (Dr Zaliha Mustafa) தலையீட்டின் பலனாகத் தீர்வுப் பிறந்துள்ளது.
தீபாவளிக்கு 10 நாட்களே இருப்பதால், பாதிக்கப்பட்ட வியாபாரிகளுக்குத் தேவையான உதவிகளைச் செய்துகொடுக்க கோலாலம்பூர் மாநகர மன்றம் DBKL-லை அவர் உத்தரவிட்டுள்ளார்.
அவர்களுக்கு மாற்று இடத்தைக் கண்டறிந்து, வியாபார பெர்மிட் விவகாரத்தையும் சுமூகமாக முடித்துகொடுக்குமாறு Dr சாலிஹா அதிகாரிகளைப் பணித்துள்ளார்.
அந்த சிறு வியாபாரிகள் வருமானமீட்ட இந்த தீபாவளி விற்பனை வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுக்கட்டும் என, நேற்று பிரிக்ஃபீல்ட்ஸ் தீபாவளி சந்தைப் பகுதிக்கு நேரில் வருகை மேற்கொண்டு விவரங்களை கண்டறிந்த போது அமைச்சர் சொன்னார்.
உண்மையில் அங்கு தீபாவளி சந்தையை நடத்த 20 விற்பனைக் கூடாரங்களுக்கான அனுமதியே DBKL-லால் வழங்கப்பட்டிருந்தது.
ஆனால் தீபாவளி சந்தையைக் குத்தகைக்கு எடுத்த சங்கமோ, 20-கும் மேற்பட்ட வியாபாரிகளுக்கு விற்பனைத் தளத்தை வாடகைக்கு விட்டதே எல்லா பிரச்னைக்கும் காரணம்.
ஆக, அனுமதிக்கப்பட்ட இடங்களுக்கும் மேல் போடப்பட்ட வியாபார கூடங்களை DBKL அதிகாரிகள் அகற்றியதில் தவறில்லை என Dr சாலிஹா சொன்னார்.
இது போன்ற பிரச்னைகள் ரமலான் சந்தைகளின் போதும் நடப்பது தான்.
அப்பிரச்னைக்கொரு முடிவாக, இனியும் மூன்றாம் தரப்பினரிடம் கொடுக்காமல் DBKL-லே நேரடியாக பெருநாள் விற்பனை சந்தைகளை நிர்வகிக்க வேண்டுமென Dr சாலிஹா உத்தரவிட்டார்.