Latestமலேசியா

தான் ஸ்ரீ ஜி.வடிவேலுவின் மறைவு கட்சிக்கும் நாட்டுக்கும் பேரிழப்பு; ம.இ.கா தலைவர் தான் ஸ்ரீ விக்னேஸ்வரன் இரங்கல்

கோலாலம்பூர், அக்டோபர் -20, மஇகாவின் உணர்வுகளோடு இரண்டறக் கலந்து வாழ்ந்த தான் ஸ்ரீ ஜி. வடிவேலுவின் மறைவு கட்சிக்கும் நாட்டுக்கும் பேரிழப்பாகும் என, மஇகா தேசியத் தலைவர் தான் ஸ்ரீ எஸ்.ஏ.விக்னேஸ்வரன் இரங்கல் தெரிவித்துள்ளார்.

மஇகாவின் பொதுச் செயலாளர், அவைத்தலைவர், சட்டமன்ற உறுப்பினர், செனட்டர், நாடாளுமன்ற மேலவையின் தலைவர் என பல்வேறு பதவிகளில் மக்கள் பணியாற்றியவர் அமரர் தான் ஸ்ரீ வடிவேலு.

குறிப்பாக, தேசிய முன்னணி காலத்தில் அதன் கூட்டணி கட்சிகளுக்கு சுழல் முறையில் நாடாளுமன்ற மேலவைத் தலைவர் பதவி வழங்கப்பட்ட போது, மஇகா சார்பில் அந்தப் பதவியை முதன் முறையாக அலங்கரித்த பெருமை அவரையே சாரும்.

அவருக்குப் பிறகு இரண்டாவது தடவையாக மஇகா சார்பில் அந்தப் பதவியை வகித்தவன் என்ற முறையில் தமக்கு பல வகையிலும் ஆலோசனைகளையும் கருத்துகளையும் வழங்கியவர் தான்ஸ்ரீ வடிவேலு என்பதை இந்த வேளையில் நன்றியுடன் நினைத்துப் பார்ப்பதாக தான் ஸ்ரீ விக்னேஸ்வரன் சொன்னார்.

பிற்காலத்தில் மஇகா தலைமைத்துவத்துடன் எவ்வளவுதான் கருத்து முரண்பாடு கொண்டிருந்தாலும், கடைசி வரை கட்சிக்கு விசுவாசமாக இருந்து ஓர் உண்மையான மஇகா உறுப்பினராகவே அவர் வாழ்ந்து மறைந்துள்ளது நமக்கெல்லாம் சிறந்த பாடமாகும்.

தான்ஸ்ரீ வடிவேலு அவர்களின் சீரிய அரசியல் பணிகளும், கட்சிக்கான பங்களிப்பும் காலத்திற்கும் நிலைத்து நிற்கும்.

அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிராத்திப்பதாகக் கூறிய தான் ஸ்ரீ விக்கி, அவரின் குடும்பத்தினருக்கும் உறவினர்களுக்கும் ஆழ்ந்த அனுதாபங்களையும் தெரிவித்துக் கொண்டார்.

நேற்று காலை தனது 92-வது வயதில் காலமான தான் ஸ்ரீ வடிவேலுவின் இறுதிச் சடங்குகள் இன்று நடைபெறுகின்றன.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!