
கோலாலம்பூர், அக் 25 – நகரின் விதிமுறைகளை மீறி, பரபரப்பான போக்குவரத்து நெரிசல் மிகுந்த சாலையில் சிலர் அலட்சியமாக மின் ஸ்கூட்டர் ஓட்டும் காணொளி வெளியாகியுள்ளது. செராஸ் தாமான் மலுரி சாலையில் நடந்ததாக நம்பப்படும் இந்த சம்பவம் தொடர்பான ஒரு பதிவை TikTok பயனர் Pelanggaran Trafik மலேசியா பகிர்ந்துள்ளார்.
முக்கிய சாலையில் எண்மர் கவனக்குறைவாக மின் ஸ்கூட்டர்களை ஓட்டுவதை அந்த காணொளியில் பார்க்க முடிந்தது. மாட் ரெம்பிட் எனப்படும் சட்டவிரோத மோட்டார் சைக்கிள் பந்தய தலைமுறையைச் சேர்ந்த ஓட்டுனர் என அழைக்கப்படும் அந்த இடுகை 55,000 பார்வையாளர்களை பெற்றது.
மலேசியாவின் பிரபலமற்ற சட்டவிரோத மோட்டார் சைக்கிளோட்டும் கலாச்சாரத்தை நினைவூட்டும் வகையில் இருப்பதோடு பங்கேற்பாளரின் பாதுகாப்பை அலட்சியப்படுத்தும் வகையில் அவர்களின் செயல்பாடு இருப்பதையும் இந்த காணொளி சித்தரிக்கிறது.
சம்பந்தப்பட்ட அந்த ஸ்கூட்டர் ஓட்டுனர்கள் வெளிநாட்டினராக இருக்கலாம் என்று நெட்டிசன்கள் ஊகித்துள்ளனர். மேலும் இதுபோன்ற பொறுப்பற்ற நடவடிக்கைகளை கட்டுப்படுத்த போக்குவரத்து சட்டத்தை கடுமையாக அமல்படுத்த வேண்டும் என்றும் அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இன்னும் சிலர் இதுபோன்ற குற்றங்களில் ஈடுபடுவோருக்கு எதிராக போலீஸ் கடுமையாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தினர். ஜனவரி 2021 முதல், கோலாலம்பூர் சாலைகளில் மின் –ஸ்கூட்டர்களை ஓட்டுவது கண்டிப்பாக தடைசெய்யப்பட்டுள்ளது.