
கோலாலம்பூர், அக்டோபர் 26 – அச்சு முதல் இலக்கவியல் ஊடகங்கள் வரை பணியாற்றும் தமிழ்ப் பத்திரிகையாளர்களை ஒன்றிணைக்கும் விதமாக, இன்று தீபாவளி கொண்டாட்ட நிகழ்ச்சி நடைபெற்றது.
ஏறக்குறைய 200க்கு மேற்பட்டவர்கள் கலந்து கொண்ட இந்நிகழ்ச்சியை, மலேசியத் தமிழ்ப் பத்திரிகையாளர் சங்கம் ஏற்பாடுச் செய்திருந்தது.
இதில் சிறப்பு விருந்தினராக இலக்கவியல் துறை அமைச்சர் கோபிந்த் சிங் டியோ, பத்து நாடாளுமன்ற உறுப்பினரும் மித்ரா சிறப்புப் பணிக்குழுவின் தலைவருமான பி.பிரபாகரன், ம.இ.கா தேசிய உதவித் தலைவரும் செனட்டருமான டத்தோ நெல்சன் ரெங்கநாதான், சிலாங்கூர் ஆட்சிக் குழு உறுப்பினர் வீ.பாப்பாராய்டு, புக்கிட் காசிங் சட்டமன்ற உறுப்பினர் ஆர். ராஜீவ், பிரதமர் துறையின் சிறப்பு அதிகாரி சண்முகன் மூக்கன், உலு சிலாங்கூர் நாடாளுமன்றத் தொகுதி ஒருங்கிணைப்பாளர் டாக்டர் சத்திய பிரகாஷ் ஆகியோர் கலந்து கொண்டனர்.
இந்நிகழ்ச்சியில் முத்தாய்ப்பாக இச்சங்கத்திற்கு 50,000 ரிங்கிட் தொகை பிரதமர் துறை சார்பாக சண்முகன் மூக்கன் வழங்கிய நிலையில், இலக்கவியல் துறை அமைச்சர் 20,000 ரிங்கிட் தொகையை வழங்கினார்.
மலேசியத் தமிழ்ப் பத்திரிகையாளர் சங்கத்திற்கு இத்தொகை ஊக்குவிப்பாகவும், எதிர்காலத் திட்டத்திற்கும் பெரும் உதவியாக அமையும் எனவும் அதன் தலைவர் முத்தமிழ் மன்னன் தெரிவித்தார்.