அங்காரா, அக்டோபர்-27, வட காசா’வில் உள்ள மொத்த மக்களும் கொல்லப்படும் அபாயத்திலிருப்பதாக, ஐநா மனிதநேய உதவியின் உயரதிகாரி எச்சரித்துள்ளார்.
கடந்த சில வாரங்களாக அங்கு இஸ்ரேலிய இராணுவம் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வரும் நிலையில் அவ்வெச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
மருத்துவமனைகள் தாக்கப்பட்டு, பணியாளர்கள் கைதுச் செய்யப்படுகின்றனர்.
சுகாதார பராமரிப்பு வசதிகளையும் கட்டமைப்புகளையும் இஸ்ரேல் தாக்கி அழித்து வருவதால், சுகாதாரப் பராமரிப்புக்கு பெரும் மருட்டல் ஏற்பட்டுள்ளது.
கட்டிட இடிபாடுகளில் சிக்கிக் கொண்டவர்களைக் காப்பாற்றுவதிலிருந்தும் மீட்புப் படையினர் தடுக்கப்படுகின்றனர்.
பாதுகாப்புக்காக மக்கள் தங்கியிருந்த இடங்கள் காலி செய்யப்பட்டு தீ வைக்கப்படுகின்றன.
குடும்பங்களைப் பிரித்து, ஆண்களையும் சிறுவர்களையும் டிரக் வாகனங்களில் தூக்கிப் போட்டு இஸ்ரேலியப் படைகள் அழைத்துச் செல்கின்றனர்.
இஸ்ரேலின் இந்த அட்டூழியத்தால் இந்த சில வாரங்களில் மட்டும் நூற்றுக்கணக்கான பாலஸ்தீனர்கள் கொல்லப்பட்டு, ஆயிரக்கணக்கானோர் உயிரைக் காப்பாற்றிக் கொள்ள மீண்டும் தப்பியோட வேண்டியுள்ளது.
போர் நிறுத்தம் ஏற்படவில்லையென்றால் வட காசாவே மயானமாகி விடுமென அந்த உயரதிகாரி கவலைத் தெரிவித்தார்.
காசாவில் இஸ்ரேல் போர் தொடுத்ததிலிருந்து பெண்கள் குழந்தைகள் உட்பட இதுவரை 43,000 பேர் கொல்லப்பட்டு, 100,000 லட்சத்துக்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர்.