புது டெல்லி, நவம்பர்-4 – அமெரிக்க அதிபர் தேர்தலில் குடியரசுக் கட்சி வேட்பாளர் டோனல்ட் டிரம்ப் வெற்றிப் பெற வேண்டி, இந்தியா புது டெல்லியில் இந்து அமைப்பினர் யாகம் வளர்த்து வழிபாடு செய்துள்ளனர்.
டிரம்ப்பின் படங்களைக் கையில் ஏந்தியும், மாலை அணிவித்தும் அவர்கள் யாகம் வளர்க்கும் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகியுள்ளன.
வெளிநாட்டு வாழ் இந்துக்களைப் பாதுகாப்பதாக டிரம்ப் வாக்குறுதி அளித்திருப்பதால், அவரின் வெற்றிக்காக அந்த சிறப்பு பூஜை நடத்தப்பட்டதாம்.
வெள்ளை மாளிகைக்குள் நுழைவதில் டிரம்ப்புக்கு கடும் போட்டியாக விளங்கும் இந்திய வம்சாவளி பெண்ணான ஜனநாயகக் கட்சியின் கமலா ஹாரீஸை விட்டு விட்டு, டிரம்ப்பை ஆதரிக்க அவ்வமைப்பினர் முடிவெடுத்திருப்பது சமூக வலைத்தளவாசிகள் மத்தியில் ஆச்சிரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
இதற்கு முன், கமலா ஹாரீசின் வெற்றிக்காக தெலங்கானா மாநிலத்தில் 11 நாட்கள் சிறப்பு யாகம் நடத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.
உலகமே ஆவலுடன் எதிர்பார்த்துக் காத்திருக்கும் அமெரிக்க அதிபர் தேர்தல், அமெரிக்க நேரப்படி நவம்பர் 5-ம் தேதி நடக்கிறது.