
கோலாலம்பூர், நவ 5 – 10 ஆண்டுகளுக்கு முன் காணாமல்போன மலேசிய ஏர்லைன்ஸின் MH370 விமானத்தை தேடுவதற்கான ஆலோசனைகள் தொடர்பில் பிரிட்டனின் Ocean Infinity நிறுவனத்துடன் அரசாங்கம் பேச்சு
நடத்தி வருகிறது. வலுவான புதிய ஆதாரங்கள் இருக்குமானால் அந்த விமானத்தை தேடுவதற்கான கடப்பாட்டை அரசாங்கம் தொடர்ந்து கொண்டிருக்கும் என போக்குவரத்து அமைச்சர் அந்தோனி லோக் (Anthony Loke) தெரிவித்தார்.
ஆகக்கடைசியான தரவுகளின் ஆய்வின் அடிப்படையில் இந்திய பெருங்கடலில் தென் பகுதியில் 15,000 சதுர கிலோமீட்டர் பகுதியில் MH 370 விமானத்தை தேடுவதற்காக பரிந்துரையை Ocean Infinity சமர்ப்பித்திருப்பதால் இதனை மலேசிய அரசாங்கம் பரிசீலிக்கக்கூடும் என அவர் கூறினார்.
MH370 விமானத்தை கண்டுபிடிப்பதற்கான அரசாங்கத்தின் முயற்சிகள் பற்றிய ஆகக்கடைசியான தகவலை கம்பார் பக்காத்தான் ஹராப்பான் (PH-Kampar)) நாடாளுமன்ற உறுப்பினர் சோங் ஜெமின் ( Chong Zhemin ) மற்றும் பெரிக்காத்தான் நேசனல் மெர்போக் (PN-Merbok) நாடாளுமன்ற உறுப்பினர் நஸ்ரி அபு ஹாசன் (Nazri Abu Hasan) அறிய முயன்றது தொடர்பில் விளக்கம் வழங்கியபோது அந்தோனி லோக் இதனை தெரிவித்தார்.
2014 ஆம் ஆண்டு மார்ச் 8ஆம்தேதி கோலாலம்பூரில் இருந்து பெய்ஜிங்கிற்கு 239 பேருடன் பயணச் சேவையில் ஈடுபட்டிருந்தபோது MH370 காணாமல் போனது விமானப் போக்குவரத்தில் மிகப்பெரிய மர்மங்களில் ஒன்றாக உள்ளது.