கோலாலம்பூர், நவம்பர் 17 – தமிழ்ச் சமுதாயத்துடன் ஐம்பது ஆண்டுகளுக்குமேல் இணைந்து தொண்டாற்றிய டத்தோ சாகுல் அமீது அவர்களின் மறைவு செய்தி அறிந்து அதிர்ச்சியுற்றதாக அவரது குடும்ப நண்பரான தான்ஸ்ரீ குமரன் கூறினார். சிலகாலம் நோய்வாய்பட்டிருந்த டத்தோ சாகுல் அமீது அவர்கள் நேற்று காலை ஈப்போ பாத்திமா மருத்துவ மனையில் காலமானார்.
தமிழ் ஆசிரியராக வாழ்க்கையத் தொடங்கியவர் பேரா மாநிலத்தில் தஞ்சோங் ரம்புத்தான் தமிழ்ப் பள்ளியின் தலைமையாசிரியராக ஓய்வுபெற்றார். மலேசிய தமிப்பள்ளி ஆசிரியர் தேசிய சங்கத்தின் பொதுச் செயலாளராகவும், தலைவராகவும் நீண்ட நாட்கள் அரும்பணியாற்றியவர்.
இளமையில் தம்முடன் இணைந்து தமிழ் இளைஞர் மணி மன்றப் பணிகளில் ஈடுபட்டதுடன், தம்மிடமிருந்து மாநில மணி மன்ற தலைவர் பொறுப்பை ஏற்று செயலாற்றியவர். பேரா மாநில ம.இ.கா.வில் தம்முடன் 1971 முதல் 1997வரை இணைந்து பேரா மாநில அரசியலில் செயலாற்றியதுடன் பேரா மாநிலத்தில் 1982-ஆம் ஆண்டு முதல் தைப்பூச விடுமுறை பெறுவதற்கு தமக்கு பெருந்துணையாய் இருந்ததை நன்றியுடன் நினைவு கூர்வதாக் குறிப்பிட்ட தான்ஸ்ரீ குமரன் அவரது பிரிவால் துயருரும் அவரது துணைவியார் மற்றும் சுற்றத்தினர்க்கு தமது குடும்பத்தினரின் இரங்கலை தெரிவிவித்துக் கொண்டதுடன் அவரது ஆதன் அமைதியடைய பிரார்த்திப்பதாகவும் குறிப்பிட்டார்.