குவாலா திரங்கானு, நவம்பர்-19, இல்லாத ஒரு தங்க முதலீட்டுத் திட்டத்தை நம்பி குவாலா திரங்கானுவைச் சேர்ந்த ஓய்வுப் பெற்ற ஆசிரியை 570,000 ரிங்கிட் மோசம் போயுள்ளார்.
கூட்டுறவுக் கழகமொன்று பல்வேறு சமய நடவடிக்கைகளுக்கு நிதி ஆதரவு கொடுத்து வருவது குறித்து
2021-ஆம் ஆண்டு வாக்கில் அவருக்கு தெரிய வந்துள்ளது.
ஆண்டுக்கு 8 முதல் 15 விழுக்காடு வரையிலான இலாப ஈவை வழங்கும் முதலீட்டுத் திட்டத்தை அக்கழகம் கொண்டிருப்பதால், அதே ஆண்டில் அந்தக் கூட்டுறவுக் கழகத்தில் இணைந்தும் விட்டார்.
இந்நிலையில், அக்கூட்டுறவுக் கழகத்தின் கிளைக் கழகத்தால் நிர்வகிக்கப்படும் தங்க விற்பனை முதலீட்டில் இணைந்து, 17 தடவையென மொத்தமாக 620,000 ரிங்கிட் பணத்தை அவர் முதலீடு செய்துள்ளார்.
ஆனால், இலாபத் தொகை என அவருக்குக் கிடைத்ததோ வெறும் 50,000 ரிங்கிட் மட்டுமே.
அதன் பிறகு எந்தவொரு பணமும் கிடைக்கவில்லை; ஆளையும் தொடர்புக்கொள்ள முடியவில்லை.
இதையடுத்தே தாம் ஏமாற்றப்பட்டிருப்பதை உணர்ந்து 59 வயது மாது கோங் பாடாக் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார்.
அவர் பறிகொடுத்தது வங்கி சேமிப்பும், ஓய்வூதிப் பணமும் ஆகும்.