கோலாலம்பூர், நவம்பர்-22,
கோலாலம்பூர் மாநாட்டு மையத்தில் (KLCC) இன்று தொடங்கியுள்ள மடானி அரசாங்கத்தின் இரண்டாம் நிறைவாண்டுக் கொண்டாட்டத்தில், போலீஸ் சம்மன்களைச் செலுத்துவதற்கான முகப்பிடங்கள் மக்கள் கூட்டத்தால் நிரம்பி வழிந்தன.
இந்த 3 நாள் நிகழ்ச்சியில் போலீஸ் சம்மன்களுக்கு 60 விழுக்காடு வரை கழிவுச் சலுகை வழங்கப்படுவதே அதற்குக் காரணமாகும்.
மக்களின் வசதிக்காக மொத்தம் 25 கட்டண முகப்பிடங்கள் திறக்கப்பட்டுள்ளன.
அவற்றில் 7 முகப்பிடங்கள் மாற்றுத்திறனாளிகள், வயதானவர்கள் மற்றும் கர்ப்பிணிப் பெண்களுக்கு ஒதுக்கப்பட்டன.
60 விழுக்காடு வரை கட்டணக் கழிவு அடிக்கடி கிடைக்காது என்பதால், மக்கள் குறிப்பாக ஏராளமான சம்மன்களை வைத்திருப்போர் நீண்ட வரிசைகளில் கால்கடுக்க காத்திருப்பதைக் காண முடிந்தது.
மக்களின் சுமையைக் குறைக்க, இது போன்ற அபராதக் கழிவுச் சலுகைகளை அடிக்கடி அறிவித்தால் நன்றாக இருக்குமென வந்தவர்களில் சிலர் கூறினர்.
Program Dua Tahun Kerajaan Madani திட்டத்தின் ஒரு பகுதியாக, இன்று முதல் ஞாயிற்றுக் கிழமை வரை 3 நாட்களுக்கு அச்சலுகை வழங்கப்படும்.
காலை 9 மணி முதல் மாலை 6 மணி வரை கட்டண முகப்பிடங்கள் திறந்திருக்கும் என்பதால், இவ்வாய்ப்பை நன்கு பயன்படுத்திக் கொள்ளுமாறு பொது மக்கள் கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.