கோலாலம்பூர், நவம்பர்-23, இந்த ஈராண்டுகளாக மடானி அரசாங்கம் நாட்டை வெற்றிகரமாக வழிநடத்தி வருவதற்கு, அரசியல் நிலைத்தன்மை, தெளிவானக் கொள்கை மற்றும் பொதுச் சேவைத் துறையின் சீரிய கடப்பாடே காரணமாகும்.
குறிப்பாக வலுவான அரசியல் நிலைத்தன்மையால், எந்தவொரு பிரச்னையும் இல்லாமல் நாட்டை சுமூகமாக நிர்வகிக்க முடிவதாக பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் கூறினார்.
எனவே தான், உலகளவில் நாட்டின் அந்தஸ்தை உயர்த்த
மக்களும், அரசாங்கத்துடன் இணைந்து செயலாற்றத் தயாராக இருப்பதாக அவர் சொன்னார்.
மடானி அரசாங்கத்தின் இரண்டாம் நிறைவாண்டை ஒட்டி கோலாலம்பூர் மாநாட்டு மையத்தில் (KLCC) நடைபெற்ற TownHall கூட்டத்தில் பேசிய போது பிரதமர் அவ்வாறு சொன்னார்.
நாட்டின் வளர்ச்சியில் தனியார் துறையினரின் பங்கும் அளப்பரியது என்றார் அவர்.
இந்த ஈராண்டுகளில் பொது அமைதியை நிலைநாட்டிய போலீஸ், இராணுவம் மற்றும் அனைத்து அமுலாக்கத் தரப்பினருக்கும் பிரதமர் நன்றித் தெரிவித்தார்.
அதிகார முறைகேடுகளையும் ஊழலையும் ஒழிக்கும் போராட்டத்தை மடானி அரசாங்கம் தொடர்ந்து தீவிரப்படுத்தும்.
அமுலாக்கத்தில் பலவீனங்கள் இருப்பின் அவற்றை ஒப்புக்கொண்டு திருத்திக் கொள்ளவும் அரசாங்கம் முயற்சிக்கும் என்றார் அவர்.
இந்த TownHall நிகழ்வில் டத்தோ ஸ்ரீ அஹ்மாட் சாஹிட் ஹமிடி, டத்தோ ஸ்ரீ ஃபாடில்லா யூசோஃப் என 2 துணைப் பிரதமர்களும் கலந்துகொண்டனர்.
நேற்று தொடங்கி பல்வேறு அங்கங்களுடன் 3 நாள் விழாவாக KLCC-யில் இந்த மடானி நிகழ்வு நடைபெறுகிறது.
15-வது பொதுத்தேர்தலுக்குப் பிறகு நாட்டில் ஒற்றுமை அரசாங்கம் அமைந்து பத்தாவது பிரதமராக டத்தோ ஸ்ரீ அன்வார் பொறுப்பேற்று, நாளையோடு ஈராண்டுகள் நிறைவடைகின்றன.