கோலாலம்பூர், நவ 27 – கடந்த பொதுத் தேர்தலில் காணப்பட்ட அரசியல் நிலைத்தன்மை மற்றும் தொங்கும் நாடாளுமன்றம் மீண்டும் ஏற்படுவதை தடுப்பதற்கு மலேசியாவுக்கு இரு கட்சி முறை தேவையென முன்னாள் பிரதமர் டாக்டர் மகாதீர் அழைப்பு விடுத்துள்ளார். கூட்டணி அரசாங்கம் மக்களிள் ஆதரவை இழந்துவிட்டதோடு பிளவுபட்ட கட்சிகள் மற்றும் பிரிந்து கிடக்கும் தரப்பினரால் நிலையான அரசாங்கத்தை அமைமப்பதற்கு எந்தவொரு தனிக்கட்சியும் ஆற்றலை இழந்துவிட்டதாக மகாதீர் கூறினார். பிளவு இருந்தால் நீங்கள் பலவீனமாகி விடுவீர்கள். ஐந்து கட்சிகளாக உடைந்துள்ள அம்னோவில் இதுதான் நடக்கிறது என அவர் சுட்டிக்காட்டினார்.
70 ஆண்டுகளுக்கும் மேலாக ஆட்சி செய்த வலுவான அம்னோ, ஐந்தாக பிளவுபட்டது. நீங்கள் ஐந்தாகப் பிரியும் போது, உங்கள் ஆதரவும் பிரியும். பெரும்பான்மையை உருவாக்கும் அளவுக்கு யாரும் வலுவாக இருக்க மாட்டார்கள் என சைட் ஹமிட் அல்பர் எழுதிய Idealis புத்தகத்தின் வெளியீட்டு விழாவில் கலந்துகொண்டு உரையாற்றியபோது மகாதீர் தெரிவித்தார். இப்போது எங்களிடம் இருப்பது மக்களால் தேர்ந்தெடுக்கப்படாத ஒரு அரசாங்கம். இது மக்களுக்கு பிடிக்காத அரசு என்றும் அவர் கூறினார். இரண்டு மேலாதிக்க அரசியல் கட்சிகளைக் கொண்ட பிரிட்டன் மற்றும் அமெரிக்கா போன்ற நாடுகளில் இருந்து மலேசியா புதிய உத்வேகம் பெற வேண்டும் என்று மகாதீர் ஆலோசனை தெரிவித்தார். மேலும் மக்களின் விருப்பத்தை பிரதிபலிக்கும் நிலையான அரசாங்கத்தை உறுதி செய்ய இரு கட்சி அமைப்பை நோக்கி நகர்வது அவசியம் என அவர் வலியுறுத்தினார்.