
சென்னை, டிசம்பர்-11, இரசிகர்கள் அண்மையைக் காலமாக ‘கடவுளே…அஜித்தே’ என தம்மை அழைப்பது குறித்து பிரபல நடிகர் அஜித் குமார் கவலைத் தெரிவித்துள்ளார்.
முக்கியமாக பொது நிகழ்வுளிலும் பொதுவெளியிலும் அவ்வாறு தேவையில்லாமல் கோஷம் போடுவது அநாகரீகமாக இருக்கிறது.
எனவே, பொது இடங்களிலும் மக்கள் அதிகம் கூடும் இடங்களிலும் அசௌகரியத்தை ஏற்படுத்தும் அச்செயலை உடனடியாக நிறுத்த வேண்டுமென, இரசிகர்களுக்கு வெளியிட்டுள்ள அறிக்கையில் அஜித் கேட்டுக் கொண்டார்.
எனது பெயரில் மட்டுமே நான் அழைக்கப்பட வேண்டுமென விரும்புகிறேன்; அதைத் தவிர்த்து வேறெந்த முன்னொட்டும் சேர்த்து அழைக்கப்படுவதில் நான் துளியும் உடன்படவில்லை என்றார் அவர்.
யாரையும் புண்படுத்தாமல் கடினமாக உழைத்து, உங்கள் குடும்பத்தைக் கவனித்து கொள்வதோடு, சட்டத்தை மதிக்கும் குடிமக்களாக இருக்க வேண்டுமென்றும் அஜித் கேட்டுக் கொண்டார்.
கடந்த சில மாதங்களாகவே அஜித் இரசிகர்கள் முக்கிய விழாக்கள், கிரிக்கெட் ஆட்டங்கள், இரயில் உள்ளிட்ட பொது போக்குவரத்துகள், அரசியல் நிகழ்ச்சிகள் என பல இடங்களில் இந்த ‘கடவுளே அஜித்தே’ கோஷத்தை எழுப்பி வருவதை வாடிக்கையாக வைத்துள்ளனர்.
தம்மை இனியும் ‘தல’ என அழைக்க வேண்டாமென்றும், அஜித், அஜித் குமார் அல்லது AK என்று அழைத்தாலே போதுமென்றும் கடந்தாண்டு அவர் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.