குளுவாங், டிசம்பர்-11 – ஜோகூர், குளுவாங், தாமான் இந்தானில் வீட்டுக்குள் புகுந்து திருடன் கைவரிசைக் காட்டியதில், 67 வயது மூதாட்டி பத்தாயிரம் ரிங்கிட்டுக்கும் மேலான பொருட்களை பறிகொடுத்துள்ளார்.
அவர் தனியாக வசித்து வந்த இரண்டு மாடி வீட்டில், வெள்ளிக்கிழமை அதிகாலை 3 மணிக்கு அச்சம்பவம் நிகழ்ந்தது.
வரவேற்பறையில் தூங்கிக் கொண்டிருந்த மூதாட்டி, ஏதோ சத்தம் கேட்டு திடீரென கண்விழித்த போது, முகமூட்டி அணிந்திருந்த ஆடவன் அவரை நெருங்கியுள்ளான்.
கத்தக் கூடாது என சைகைக் காட்டியதோடு, மூதாட்டியின் வாயைப் பிடித்தும் அழுத்தினான்.
கண்ணிமைக்கும் நேரத்தில், மூதாட்டி அணிந்திருந்த ஒரு தங்கச் சங்கிலி மற்றும் 2 தங்கக் காப்புகளை அவன் பறித்துக் கொண்டான்.
வரவேற்பறைக் கட்டிலுக்கு அடியில் மூதாட்டி வைத்திருந்த கைப்பையிலிருந்து, 2,000 ரிங்கிட் ரொக்கம், 4 தங்க மோதிரங்கள், 5 கல் பதித்த மோதிரங்கள் ஆகியவற்றையும் எடுத்துக் கொண்டு அவன் கம்பி நீட்டினான்.
அத்திருட்டுச் சம்பவம் குற்றவியல் சட்டத்தின் 392-வது பிரிவின் கீழ் விசாரிக்கப்படுவதாக, குளுவாங் போலீஸ் தலைவர் துணை ஆணையர் Bahrin Mohd Noh கூறினார்.
அச்சம்பவம் முன்னதாக சமூக ஊடகங்களில் வைரலாகி, சுற்று வட்டார மக்கள் எச்சரிக்கையாக இருக்குமாறு கேட்டுக் கொள்ளப்பட்டதும் குறிப்பிடத்தக்கது.