கோலாலம்பூர், டிச 16 – தெருவில் சுற்றித் திரியும் வளர்ப்பு பிராணிகளை கையாளும்போது அவற்றை ஊராட்சி மன்றங்கள் கொல்லக்கூடாது என்ற உத்தேச கொள்கையை எதிர்வரும் பிப்ரவரி மாதம் கூடும் மாநில சட்டமன்ற கூட்டத்தில் தாக்கல் செய்யப்போவதாக சிலாங்கூர் ஆட்சிக்குழு உறுப்பினர் Ng Suee Lim உறுதியளித்திருப்பதாக அரசு சார்பற்ற இயக்கம் ஒன்று தெரிவித்துள்ளது. டிசம்பர் 13 ஆம் தேதி ஊராட்சி மன்றத்திற்கான சிலாங்கூர் ஆட்சிக்குழு உறுப்பினர் , பெட்டாலிங் ஜெயா நாடாளுமன்ற உறுப்பினர் லீ சின் சுங்( Lee Chean Chung ) மற்றும் பிராணிகளை கொடுமைப்படுத்துவோருக்கு எதிரான இதர அரசு சார்பற்ற பிரதிநிதிகளுடன் நடைபெற்ற சந்திப்பு கூட்டத்தில் இந்த ஆலோசனை முன்மொழியப்பட்டதாக கைவிடப்பட்ட மலேசிய பிராணிகள் சங்கம் தெரிவித்துள்ளது.
தெருவில் சுற்றித் திரியும் வளர்ப்பு பிராணிகளை கொல்வதை தடை விதிக்கும் கொள்கை குறித்து சமூக இயக்கங்களின் உறுப்பினர்கள் அந்த கூட்டத்தில் விளக்கம் அளித்தனர். ஊராட்சி மன்ற அதிகாரிகள் பின்பற்றும் கருணைக் கொலை செய்வதற்கு பதிலாக அந்த பிராணிகளுக்கு கருத்தடை செய்தபின் விடுவிக்கப்பட வேண்டும் என அரசு சார்பற்ற இயக்கங்களின் பிரதிநிதிகள் வாதிட்டனர். அனைத்து ஊராட்சி மன்றங்களிலும் பிராணிகளை தத்தெடுப்பது மற்றும் அவற்றுக்கான கருத்தடை தடுப்பூசியின் மூலம் தெருவில் சுற்றித்திரியும் வளர்ப்பு பிராணிகளின் பிரச்னைக்கு தீர்வு காண முடியும் என அவர்கள் வலியுறுத்தினர். வளர்ப்புப் பிராணிகளை கொல்லக்கூடாது என்ற முன்னோடி கொள்கை பெட்டாலிங் ஜெயா ஊராட்சி மன்ற பகுதிகளில் அமல்படுத்தும் கடப்பாட்டுடன் லீயின் முழு ஆதரவோடு இந்த ஆலோசனையை தாம் பெற்றுள்ளதாக NG Suee Lim தெரிவித்தார்.