ஈப்போ, டிச 18 – ஈப்போ,சீமோரில் தாமான் கௌபாங்கிலுள்ள ஒரு வீட்டில் நடைபெற்ற கொள்ளையில் பூட்டப்படாத காரில் புகுந்து பணத்தை கொள்ளையிட்ட ஆடவனை போலீசார் தீவிரமாக தேடிவருகின்றனர். செவ்வாய்க்கிழமை முதல் சமூக வலைத்தளங்களில் வைராலாகிவரும் இந்த கொள்ளைச் சம்பவத்தில் பாதிக்கப்பட்ட 36 வயது ஆடவர் ஒருவர் போலீசில் புகார் செய்துள்ளதாக ஈப்போ மாவட்ட போலீஸ் தலைவர் துணை கமிஷனர் அபாங் ஜைனால் அபிடின் தெரிவித்தார். அண்டை வீட்டின் சுவர் மீது ஏறி அந்த வீட்டின் முற்றத்திற்குள் சந்தேகப் பேர்வழி புகுந்திருப்பது விசாரணை மூலம் தெரியவந்திருப்பதாக அவர் கூறினார்.
புகார் தாரரின் மனைவிக்கு சொந்தமான பூட்டப்படாத காரில் புகுந்த அந்த சந்தேகப் பேர்வழி Dashboard பகுதியிலிருந்து பணத்தை திருடிச் சென்றது ரகசிய கண்காணிப்பு கேமராவின் மூலம் காணமுடிந்ததாக இன்று வெளியிட்ட அறிக்கையொன்றில் அபாங் ஜைனால் தெரிவித்தார். எனினும் அந்த காரில் சேதம் எதுவும் ஏற்படவில்லை. மேலும் அந்த வீட்டின் கதவுகளிலும் சந்தேக நபரின் கைரேகை எதுவும் காணப்படவில்லையென அவர் கூறினார்.