
கோலாலம்பூர், டிசம்பர் 19 – தொடர் கனமழையால் கிளத்தானில் ஏற்பட்ட வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு, தொழில் முனைவர் மேம்பாடு மற்றும் கூட்டுறவு அமைச்சு, இன்று 2 லட்சம் ரிங்கிட் மதிப்பிலான உதவிப் பொருட்களை அனுப்பியுள்ளது.
இந்த உதவிகள், அமைச்சின் கீழ் இயக்கும் மலேசிய கூட்டுறவு ஆணையத்தின் கீழ் வழங்கப்பட்டுள்ளதாக, தொழில் முனைவர் மேம்பாடு மற்றும் கூட்டுறவு துணையமைச்சர் டத்தோ ஸ்ரீ ரமணன் ராமகிருஷ்ணன் தெரிவித்தார்.
கிளத்தான் மாநிலத்திலுள்ள 14 நாடாளுமன்ற பகுதிகளுக்கும் இந்த உதவி பொருட்கள் விநியோகிக்க 14 வாகனங்கள் மற்றும் ஒரு லோரி பயன்படுத்தப்பட்டதாக அவர் கூறினார்.
இந்த நிவாரண முயற்சியால், கிளந்தானிலுள்ள 2,000க்கும் மேற்பட்ட குடும்பங்களுக்கு உதவியளிக்கப்படும் என்று அவர் கூறினார்.
இதனிடையே, வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட வணிகர்களும் மலேசிய கூட்டுறவு ஆணையத்தின் உதவி நிதிக்கு, போலிஸ் புகாருடன் விண்ணப்பிக்கலாம் என்றார் அவர்.
இதுவரை 580,000 ரிங்கிட் மதிப்பிலான நிதி, SKM மூலம் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது.
இந்த உதவிகளால் நாடு முழுவதும் 5,800 குடும்பங்கள் பயனடையவுள்ளன என்றும் அவர் தெரிவித்தார்.