கோலாலம்பூர், டிசம்பர்-19, நாட்டில் 59 விழுக்காட்டு முதலாளிமார்கள், வரும் 2025-ஆம் ஆண்டில் தொழிலாளர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கத் திட்டமிட்டுள்ளனர்.
31 விழுக்காட்டினர் நடப்பிலுள்ள ஊழியர்களின் எண்ணிக்கையே போதுமென கருதுகின்றனர்.
பிரபல மனித வள ஆய்வு நிறுவனமான Randstand Malaysia மேற்கொண்ட, 2025 வேலைச் சந்தை கண்ணோட்டம் மற்றும் ஊதிய உயர்வுப் போக்கு மீதான ஆய்வறிக்கையில் அது தெரிய வந்துள்ளது.
தொழில்நுட்பத் துறையில் தான் வேலைக்கு ஆள் சேர்க்கும் நடவடிக்கைகள் விறுவிறுப்படையுமென 41 விழுக்காட்டு முதலாளிகள் எதிர்பார்க்கின்றனர்.
AI மற்றும் டிஜிட்டல் உருமாற்றத் திட்டங்களுக்கு, நிபுணத்துவம் வாய்ந்தவர்களை அதிகளவில் வேலைக்கு எடுக்க 26 விழுக்காட்டினர் திட்டமிட்டுள்ளனர்.
தேவைப்படும் திறமைகளை வைத்துள்ளவர்கள் நேர்காணலின் போது அதிக சம்பளத்திற்கு பேச்சு வார்த்தை நடத்தலாமென்பதால், அச்சூழலை எதிர்கொள்ள 52 விழுக்காட்டு மலேசிய நிறுவனங்கள் புத்தாண்டில் சற்று பெரிய பட்ஜெட்டை ஒதுக்குவதும் கண்டறியப்பட்டுள்ளது.
இந்நாட்டில் தங்களின் செயல்பாட்டை விரிவாக்கம் செய்யவும், முதலீட்டத்தை அதிகரிக்கும் பல நிறுவனங்கள் முனைப்புக் காட்டுகின்றன.
இதனால், உயர் திறன் தேர்ச்சிப் பெற்ற தொழில்முறை வேலையாட்களுக்கு வரவேற்பு அதிகரித்துள்ளது.
அதே சமயம் டிஜிட்டல், தயாரிப்பு மற்றும் கட்டுமானத் துறைகளால் உந்தப்பட்டு, 2025-ல் மலேசியா தொடர்ந்து வலுவான பொருளாதார வளர்ச்சியைப் பதிவுச் செய்யும் எதிர்பார்க்கப்படுகிறது.
அப்படி பொருளாதாரம் உயர்ந்தால், சிறப்புத் திறன் தேர்ச்சிப் பெற்றத் தொழிலாளர்களுக்கான தேவையும் இயல்பாகவே அதிகரிக்குமென அந்த ஆய்வு கூறுகிறது.