புத்ரா ஜெயா, டிச 19 -பள்ளி விடுமுறை காலத்தை முன்னிட்டு , நாடு முழுவதும் உள்ள அனைத்து குடிநுழைவுத்துறையின் கடப்பிதழ் வழங்கும் அலுவலகங்களில் முகப்பிட சேவைகளின் நேரம் இவ்வாண்டு டிசம்பர் 21 ஆம் தேதி முதல் 28 ஆம்தேதிவரை நீட்டிக்கப்படும். வாடிக்கையாளர்கள் கேட்டுக்கொண்டதைத் தொடர்ந்து முகப்பிட சேவை நேரம் நீட்டிக்கப்பட்டுள்ளதாக குடிநுழைவுத்துறை தனது முகநூலில் தெரிவித்துள்ளது. கடப்பிதழ் விவகாரங்கள் சுமூகமான முறையில் தீர்ப்பதற்கு இந்த நடவடிக்கை உதவும் என கூறப்பட்டது. இதே இடுகையில் பதிவேற்றப்பட்ட போஸ்டரில், ஜோகூர், கெடா, கிளந்தான் மற்றும் தெரெங்கானு தவிர அனைத்து மாநிலங்களிலும் கடப்பிதழ் வழங்கும் அலுவலகங்கள் வரும் டிசம்பர் 23 திங்கள் தொடங்கி டிசம்பர் 26 வெள்ளிக்கிழமைவரை காலை 8 மணி முதல் இரவு 8 மணி வரை செயல்படும் என குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் மதியம் ஒரு மணி முதல் 2 மணிவரை ஒரு மணி ஓய்வு நேரம் வழங்கப்படும்.
டிசம்பர் 27 ஆம் தேதி வெள்ளிக்கிழமை மற்றும் டிசம்பர் 21 மற்றும் டிசம்பர் 28 தேதிகளில் சனிக்கிழமை அலுவலகம் நேரம் காலை 8 மணி முதல் பிற்பகல் 3 மணிவரை செயல்படும். ஜோகூர், கெடா, கிளந்தான் மற்றும் தெரெங்கானுவில், ஞாயிற்றுக்கிழமை டிசம்பர் 22 ஆம் தேதிமுதல் டிசம்பர் 24ஆம்தேதிவரை காலை 8 மணி முதல் இரவு 8 மணி வரை முகப்பிட சேவைகள் செயல்படும். கிறிஸ்துமஸ் விடுமுறையை முன்னிட்டு டிசம்பர் 25ஆம் தேதி (புதன்கிழமை) அனைத்து கடப்பிதழ் அலுவலகங்களும் மூடப்படும்.