செகாம்புட், டிசம்பர்-27 – மலேசியாவை ஒரு ‘கிறிஸ்துவ நாடாக’ மாற்றுவதற்கு தாம் முயலுவதாகக் கூறப்படுவதை, இளைஞர் – விளையாட்டுத் துறை அமைச்சர் ஹானா இயோ மறுத்துள்ளார்.
திட்டமிட்டே அப்படியொரு தோற்றம் ஏற்படுத்தப்படுகிறது; எனவே அது தொடர்பான வீடியோக்கள் மற்றும் பதிவுகள் குறித்து போலீசில் புகார் செய்யப்போவதாக ஹானா சொன்னார்.
அத்தகைய வீடியோக்கள், தேசியப் போலீஸ் படை முன்னாள் தலைவர் தான் ஸ்ரீ மூசா ஹசானுக்கு (Tan Sri Musa Hassan) எதிராக தாம் தொடுத்த அவதூறு வழக்கில், தமக்குப் பின்னடைவை ஏற்படுத்தலாமென்றார் அவர்.
மலேசியாவை ‘கிறிஸ்துவ நாடாக’ தாம் மாற்ற முயலுவதாக மூசா ஹசான் அவதூறு பரப்பியதாக ஹானா தொடுத்த வழக்கை, முன்னதாக உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
அம்முடிவை எதிர்த்து மேல் முறையீட்டு நீதிமன்றம் செல்லவிருப்பதாக செகாம்புட் நாடாளுமன்ற உறுப்பினருமான ஹானா உறுதிப்படுத்தினார்.
ஆனால், மேல்முறையீடு செய்ய தமக்குள்ள உரிமையைக் கேள்வியெழுப்பி, தாம் இஸ்லாத்துக்கு எதிரானவர் போன்றதொரு தோற்றத்தை ஏற்படுத்த WhatsApp-பில் அவதூறு வீடியோக்கள் பரப்பப்படுகின்றன.
அக்குற்றச்சாட்டுகள் முற்றிலும் தவறானவை; இஸ்லாத்தை தேசிய மதமாக அங்கீகரிக்கும் கூட்டரசு அரசியலமைப்புச் சட்டத்திற்கு எதிராக ஒரு காலமும் செயல்பட மாட்டேன் என ஹானா தனது facebook பதிவில் கூறினார்.