மோஸ்கோ, டிசம்பர்-29 – கிறிஸ்மஸ் தினத்தன்று அசர்பைஜான் பயணிகள் விமானம் கசக்ஸ்தானில் விழுந்து விபத்துக்குள்ளான சம்பவத்திற்கு, ரஷ்ய அதிபர் விளாடிமிர் புட்டின் மன்னிப்புக் கோரியுள்ளார்.
அசர்பைஜான் அதிபர் இல்ஹாம் அலியேவிடம் (Ilham Aliyev) தொலைபேசியில் பேசிய போது, ரஷ்ய வான்வெளியில் நிகழ்ந்த அத்துயரத்திற்காக புட்டின் மன்னிப்புக் கேட்டதாக, அதிபர் மாளிகையான கிரம்ளின் கூறியது.
ரஷ்யாவின் ச்செச்னியா (Chechnya) பிராந்தியத்தின் தலைநகரான குரோஸ்னியில் (Grozny) விமானம் தரையிறங்க பல முறை முயன்ற போது, யுக்ரேனின் ட்ரோன் தாக்குதல்களை ரஷ்ய வான் பாதுகாப்புப் படைகள் முறியடித்துக் கொண்டிருந்தன;
அப்போது தான் அவ்விபத்து நிகழ்ந்திருக்கிறது என புட்டின் சொன்னார்.
ஆனால், ரஷ்யாவின் தவறே அவ்விபத்துக்குக் காரணமென்பதை அவர் நேரடியாகக் குறிப்பிடவில்லை.
என்றாலும், ஒருவேளை அத்தாக்குதலின் போது தான் அசர்பைஜான் விமானம் தவறுதலாக சுடப்பட்டிருக்கலாமென்ற யூகங்கள் எழும்பியுள்ளன.
இந்நிலையில், விமான விபத்து குறித்த வெளிப்படையான விசாரணைக்கு இரு நாட்டு அதிபர்களும் தங்களின் கடப்பாட்டை உறுதிச் செய்துள்ளனர்.
விசாரணை முழுமைப் பெற்றதும், அது பகிரங்கப்படுத்தப்படுமென்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
67 பேரை ஏற்றியிருந்த அசர்பைஜான் விமானம், புதன்கிழமை காலை கசக்ஸ்தானின் அக்தாவ் விமான நிலையமருகே விழுந்து வெடித்துச் சிதறியது.
அதில் 38 பேர் உயிரிழந்த வேளை 29 பேர் காப்பாற்றப்பட்டனர்.