பாயான் லெப்பாஸ், டிசம்பர்-31, இரண்டாவது பினாங்கு பாலத்தின் 18-வது கிலோ மீட்டரில் நேற்று பிற்பகலில் மெர்சிடிஸ் பென்ஸ் C200 கார் தீப்பிடித்தது.
அந்த PLUS நெடுஞ்சாலையின் வலப்புறப் பாதையில் கைவிடப்பட்ட கார் பேட்டரியை மோதி, தடம்புரண்டு மெர்சிடிஸ் தீப்பற்றியது விசாரணையில் கண்டறியப்பட்டது.
காரோட்டி தொடர்ந்து பயணிக்க, காரிலிருந்து புகை வெளியேறி தீப்பிடித்துக் கொண்டதாக பாராட் டாயா மாவட்ட போலீஸ் தலைவர் துணை ஆணையர் சசாலீ அடாம் (Sazalee Adam) தெரிவித்தார்.
கார் 80 விழுக்காடு எரிந்துபோனது; எனினும் 23 வயது காரோட்டியும் உடனிருந்த பெண் பயணியும் விரைந்து செயல்பட்டுத் தங்களைக் காப்பாற்றிக் கொண்டனர்.
தீயணைப்பு-மீட்புப் துறையினர் 15 நிமிடங்களில் தீயைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தனர்.
இந்நிலையில் பேட்டரியை கைவிட்டுச் சென்றவரை அடையாளம் காண சம்பவ இடத்திலிருந்த CCTV கேமரா பதிவை போலீஸ் ஆராயவுள்ளதாகவும் சசாலீ சொன்னார்.
அக்கார் தீப்பற்றிய சம்பவத்தால் சுமார் 5 கிலோ மீட்டர் தூரத்துக்கு அங்கு நெரிசல் ஏற்பட்டது.