கோலாலம்பூர், ஜனவரி-10, கிள்ளான் துறைமுகம் – கே.எல்.சென்ட்ரல் – கிள்ளான் துறைமுகம் வழித்தடத்திற்கான KTM பேருந்து மற்றும் Komuter இரயில் சேவைகள், முறையே வரும் ஜனவரி 17 மற்றும் 20-ஆம் தேதி தொடங்கி 30 நிமிடங்களுக்கு ஒரு முறை வழங்கப்படும்.
அதாவது அவ்வழித்தடத்திற்கான பயணிகளின் காத்திருக்கும் நேரம் 1 மணியிலிருந்து 30 நிமிடங்களுக்குக் குறைக்கப்படுகிறது.
அதே சமயம், கிள்ளான் துறைமுகத்திலிருந்து கே.எல்.சென்ட்ரல் வரையிலான மொத்தப் பயண நேரமும் 15 நிமிடங்களுக்குக் குறையவிருக்கிறது.
Komuter இரயில் சேவைக்கான புதிய அட்டவணை ஜனவரி 20 முதல் அமுலுக்கு வருமென போக்குவரத்து அமைச்சர் அந்தோனி லோக் தெரிவித்தார்.
எனினும், பேருந்து சேவைகளுக்கான அட்டவணை சற்று முன் கூட்டியே ஜனவரி 17-ஆம் தேதி அமுலுக்கு வருமென்றார் அவர்.
கிள்ளான் துறைமுகம் – கே.எல்.சென்ட்ரல் வழித்தடத்துக்கான இரயில் சேவை காலை உச்ச நேரங்களில் ஒவ்வொரு 30 நிமிடங்களுக்கும் வழங்கப்படும்.
மற்ற நேரங்களில், போக்குவரத்து நெரிசலைப் பொருத்து, 30 நிமிட இடைவெளியில் பேருந்து சேவை வழங்கப்படும்.
அதே போல், கே.எல்.சென்ட்ரல் – கிள்ளான் துறைமுகம் வழித்தடத்தில், மாலை உச்ச நேரங்களில் 30 நிமிடங்களுக்கு ஒரு முறை இரயில் சேவை வழங்கப்படும்.
மற்ற நேரங்களில் ஒவ்வொரு 30 நிமிடங்களுக்கும் பேருந்து சேவை இருக்கும்.
கிள்ளான் பள்ளத்தாக்கின் இரண்டாவது மின்சார இரயில் தண்டவாளத் திட்ட நிர்மாணிப்புதிட்டத்தால், கே.எல்.சென்ட்ரல் – கிள்ளான் துறைமுகம் வழித்தடத்துக்கான KTM இரயில்கள் வந்திறங்கும் நேரம் அதிருப்தியளிப்பதாக புகார்கள் எழுந்ததை அடுத்து, சேவைத் தரமுயர்த்தல் மேற்கொள்ளப்படுவதாக அமைச்சர் சொன்னார்.