
ஜோகூர் பாரு, ஜன 14 – ரினி தோட்ட தமிழ்ப் பள்ளியின் சாதனை நட்சத்திர விழா அண்மையில் மிகக் கோலாகலமாக இஸ்கண்டர் புத்திரி பல்நோக்கு மண்படத்தில் நடைபெற்றது.
வகுப்பறை தர மதிப்பிட்டில் சிறந்த அடைவு நிலைப் பெற்ற மாணவர்களை சிறப்பித்து பரிசுகள் வழங்கும் நோக்கத்தில் இந்த நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டதாக பள்ளியின் தலைமையாசிரியை திருமதி தமிழ்ச் செல்வி தெரிவித்தார்.
இந்த அங்கீகாரத்தின் மூலம் மாணவர்கள் மேலும் உற்சாகம் பெறுவதோடு , அவர்கள் கல்வித்துறையில் வெற்றிப் பாதைக்கு செல்வதற்கு தூண்டுகோலாக இருக்கும் என்றும் அவர் நம்பிக்கை தெரிவித்தார்.
இந்த நட்சத்திர விழாவில் கிட்டத்தட்ட 430 மாணவர்களுக்கு பல்வேறு சிறப்பு பிரிவுக்கான பரிசுகளை தலைமையாசிரியர், துணைத் தலைமையாசிரியர்கள் , பெற்றோர் ஆசிரியர் சங்கத்தினர் மற்றும் பள்ளி வாரியக் குழுவினர் வழங்கி சிறப்பித்தனர்.
மாற்றங்களை எதிர்நோக்கி மாணவர் சமுதாயத்தை தயார்படுத்த வேண்டும் என்பதோடு மாணவர்கள் தங்களின் திறமைகளை வெளிக்கொணர பல்வேறு தளங்களை அமைக்க வேண்டுமென இந்த நிகழ்ச்சியில் சிறப்பு பிரமுகராக கலந்துகொண்ட ஜோகூர் மாநில பாலர் பள்ளி, ஆரம்பப் பள்ளி நிர்வாகப் பிரிவு உதவி இயக்குனர் ரவிச்சந்திரன் இராமச்சந்திரன் கேட்டுக்கொண்டார்.
மாசாய் இந்தியர் மேம்பாட்டுச் சங்கத் தலைவர் புருஷோத்தமன் இந்த விழாவை அதிகாரப்பூர்வமாக தொடக்கிவைத்து உரையாற்றியதோடு , மாணர்கள் தாங்கள் கலந்துகொள்ளும் அனைத்து துறைகளிலும் மிளிர்வதற்கு கடுமையான உழைப்பு மற்றும் முயற்சி தேவையென வலியுறுத்தினார்.
இதனிடையே இப்பள்ளிக்கு இணைக்கட்டிம் எழுப்புவதற்கான முன்னேற்பாடு நடவடிக்கைகள் தொடக்க நிலையில் இந்நிகழ்ச்சியின் போது கூறப்பட்டது