Latestமலேசியா

மேடையில் பாடிக் கொண்டிருந்தபோதே மயங்கி விழுந்து மலேசிய பாடகர் மரணம்; இரசிகர்கள் அதிர்ச்சி!

கோலாலம்பூர், ஜன 14 – டான்ஸ்ரீ சோமா அரங்கத்தில் நடைபெற்ற நீங்காத நினைவுகள் கலைநிகழ்ச்சியில் பாடலை பாடி ரசிகர்களை மகிழ்வித்துக் கொண்டிருந்த நாடறிந்த கலைஞர் பாரதி கண்ணா என்ற முருகையா முனுசாமி காலமானார். சனிக்கிழமையன்று இரவு 11 மணியளவில் “பக்கத்திலே கன்னி பெண்ணிருக்கு” என்ற பாடாலை மற்றொரு பாடகி கமலேஸ்வரியுடன் இணைந்து பாடிக்கொண்டிருந்தபோது திடீரென அவர் மயங்கி கீழே விழுந்தார். இந்த திடீர் சம்பவத்தினால் அந்த கலைநிகழ்ச்சியை பார்த்துக் கொண்டிருந்த ரசிகர்கள் பெரும் அதிர்சிக்குள்ளாகினர். இதனைத் தொடர்ந்து அவர் உடனடியாக சிகிச்சைக்காக பெட்டாலிங் ஜெயா பல்கலைக்கழக மருத்துவமனைக்கு கொண்டுச் செல்லப்பட்டு சிகிச்சை வழங்கப்பட்டபோதிலும் மாரடைப்பின் காரணமாக ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் மணி 2.34 அளவில் இறந்தார்.

59 வயதான பாரதி கண்ணா கடந்த 40 ஆண்டுகாலமாக மேடை நிகழ்ச்சிகளில் பாடல்களை பாடிவந்துள்ளார். பாடல்களை பாடுவதோடு, நடனமாடுவது, நகைச்சுவை செய்வது ,அறிவிப்பாளர் போன்ற பன்முக திறமைகளையும் கொண்ட கலைஞராக அவர் விளங்கி வந்துள்ளார். இந்த நிகழ்ச்சியில் இதற்கு முன்னதாக மூன்று பாடல்களை பாடி ரசிகர்களை மகிழ்வித்த அவருக்கு திடிரென இந்த துயரச் சம்பவம் நிகந்தது மலேசிய கல உலகிற்கு பெரும் இழப்பு என அந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்ட பல கலைஞர்கள் தெரிவித்தனர். செராஸ் தாமான் கோனட் அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வந்த அவருக்கு மனைவி மற்றும் இரண்டு பிள்ளைகள் உள்ளனர். நேற்று திங்கட்கிழமையன்று இறுதி சடங்கிற்குப் பின்னர் அவரது உடல் செராஸ் , ஜாலான் கோரி மயானத்தில் தகனம் செய்யப்பட்டது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!