
கோலாலம்பூர், ஜனவரி-17, பொது சுகாதார சேவையில் மருத்துவர்கள் மற்றும் பல் மருத்துவர்கள் தொடர்ச்சியாக 18 மணி நேரங்கள் வேலை செய்ய வகை செய்யும் புதிய வேலை நேர முறையை, விமர்சனம் என்ற பெயரில் எடுத்த எடுப்பிலேயே ஒதுக்கி விட வேண்டாம்.
மாறாக அது முதலில் அமுலாக்கம் காண வாய்ப்பளிக்க வேண்டுமென, செனட்டர் Dr ஆர். லிங்கேஷ்வரன் கேட்டுக் கொண்டுள்ளார்.
Waktu Kerja Berlainan (WKB) எனப்படும் அப்புதிய முறை பிப்ரவரி 1 தொடங்கி
6 மருத்துவமனைகளில் அமுலுக்கு வருகிறது.
தம்மைப் பொருத்தவரை, அப்புதிய வேலை நேர முறை சுகாதாரப் பணியாளர்களுக்கு மேலும் தரமான வாழ்க்கைச் சூழலை வழங்குமென, பினாங்கு சுங்கை பாக்காப் மருத்துவமனையின் முன்னாள் இயக்குநருமான லிங்கேஷ் சொன்னார்.
உண்மையில், புதிய முறையின் கீழ் மருத்துவ அதிகாரிகள் மற்றும் நிபுணர்களின் On-Call அழைப்புக்கான அலவன்ஸ் குறைவாக இருப்பதாக, இவ்விவகாரம் திசை திருப்பப்பட்டுள்ளது என்றார் அவர்.
WBB முறையின் கீழ், வேலை வரம்பு, நடப்பிலுள்ள 24 முதல் 33 மணி நேரங்களை விடக் குறைவாக உள்ளது.
எனவே, அது குறித்து சுகாதார அமைச்சைக் கடுமையாகத் தாக்கி பேசும் முன், அம்னோ இளைஞர் பிரிவுத் தலைவர் டத்தோ Dr அக்மால் சாலே, அத்திட்டத்தின் முழு விவரங்களையும் நன்கு படித்துப் பார்க்க வேண்டும்.
ஆனால், அவரின் பேச்சு ஏதோ விளம்பர நோக்கத்தைக் கொண்டது போலவே இருப்பதாக லிங்கேஷ் சாடினார்.
24 மணிநேர On-Call அழைப்புக்கான தற்போதைய அலவன்ஸ் தொகை 220 ரிங்கிட்; அதுவே WBB-யின் கீழ், மருத்துவர்கள் 15 மணிநேரத்திற்கு 275 ரிங்கிட்டைப் பெறுவார்கள் என்பதை, எதிர்ப்பாளர்கள் கவனிக்கத் தவறிவிட்டனர்.
WBB-யின் கீழ் ஒரு வாரத்தில் மருத்துவ அதிகாரிகள் பணிபுரிய அனுமதிக்கப்படும் அதிகபட்ச வேலை நேரம் 75 மணிநேரம் ஆகும்; இதில் 45 மணிநேர கட்டாய வேலை வாரமும் அடங்கும்.
அதோடு அவர்களுக்கு இனி ஒவ்வொரு மாதமும் இரண்டு வார விடுமுறை கிடைக்கும் என Dr லிங்கேஷ் சுட்டிக் காட்டினார்.
இந்த WBB உத்தேச வேலை நேர முறையால், ஏராளமான மருத்துவப் பணியாளர்கள் அரசாங்க மருத்துவமனைகளை விட்டு வெளியேறி விடுவர்;
எனவே அத்திட்டத்தை ஒத்தி வைக்குமாறு Dr அக்மால் முன்னதாகக் கேட்டுக் கொண்டிருந்தார்.