பேங்கோக் கண்காட்சியில் வாண வேடிக்கை சத்தத்தால் யானை மிரண்டோடியதில் ஐவர் காயம்

பேங்கோக், ஜனவரி-20 – தாய்லாந்து பேங்கோக்கில் கண்காட்சித் தளத்திற்கு சட்டவிரோதமாகக் கூட்டி வரப்பட்ட யானை, வாண வேடிக்கை சத்தத்தைக் கேட்டு மிரண்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
ஜனவரி 18-ஆம் தேதியன்று கண்காட்சியின் தொடக்க விழாவின் ஒரு பகுதியாக வாண வேடிக்கை நடத்தப்பட்டது.
இதனால் மிரண்டு போன Plai Khun Thong எனும் அந்த யானை தெறித்து ஓடியதில், கூட்டத்திலிருந்த பலர் மிதி பட்டனர்.
தாய், மகள் என இருவரை யானை மோதி மிதிப்பதும், மற்றொருவர் அதனைத் தடுக்க முயலுவதும் வைரலான வீடியோவில் தெரிகிறது.
யானை மிதித்தலில் மொத்தமாக 5 பேர் காயமடைந்து மருத்துவமனைகளில் சிகிச்சைப் பெற்றனர்.
பிச்சையெடுக்க வைப்பதற்காக அந்த யானை அங்குக் கொண்டு வரப்பட்டதாக, சம்பவத்தை நேரில் பார்த்த சாட்சிகள் கூறினர்.
கூட்டத்திலிருந்து மிரண்டு ஓடிய யானை, சுமார் 2 கிலோ மீட்டர் தூரத்தில் பின்னர் கண்டுபிடிக்கப்பட்டது.
உரிமையாளர் மீது நடவடிக்கை எடுக்கப்பட ஏதுவாக, டிரக்கில் ஏற்றப்பட்டு யானை போலீஸ் நிலையம் கொண்டுச் செல்லப்பட்டது.