ஜோகூர் பாரு, ஜனவரி-22 – ஜோகூர் பாரு KSL City Mall பேரங்காடியில் பெண்ணொருவரைக் கடத்த முயற்சி மேற்கொள்ளப்பட்டதாகக் கூறப்படுவது தொடர்பில் போலீஸ் புகார் எதுவும் பெறப்படவில்லை.
என்றாலும் வைரலான அச்சம்பவம் குறித்து விசாரணைத் தொடங்கியிருப்பதாக, தென் ஜோகூர் பாரு போலீஸ் தலைவர் ரவூப் செலாமாட் கூறினார்.
சம்பவக் காணொலி போலீஸின் கைகளுக்குக் கிடைத்துள்ளது; இந்நிலையில் அதில் சம்பந்தப்பட்டது யார், கடத்தல் முயற்சிக்கான காரணம் உள்ளிட்டற்றை கண்டறிந்து வருவதாக அவர் சொன்னார்.
விசாரணைக்கு இடையூறாக அமையுமென்பதால், பொது மக்கள் யாரும் அவ்வீடியோவைப் பகிர வேண்டாமென்றும் ரவூப் கேட்டுக் கொண்டார்.
ஓர் ஆணும் பெண்ணும் ஏதோ பொருட்களை விற்பதாகக் கூறிக் கொண்டு தம்மை நெருங்கியதாக,
முன்னதாக வைரலான வீடியோவில் பெண்ணொருவர் கூறியிருந்தார்.
பொருளை வாங்க விருப்பம் இல்லையென தெரிவித்த போதும், எப்படியோ பேசி இருவரும் அப்பெண்ணின் மனதை மாற்றியுள்ளனர்.
அவரும் ஒப்புக் கொண்டு பொருளைச் சோதித்து பார்த்துள்ளார்;
பொருளை நுகர்ந்த வேகத்தில் தனக்கு மயக்கம் வருவது போலிருந்ததாகவும், கொஞ்சம் தாமதித்திருந்தால் இருவரும் தன்னைக் கடத்திச் சென்றிருக்கக் கூடுமென்றும் அஞ்சி போலீஸில் புகார் செய்ததாக அப்பெண் கூறினார்.