
கோலாலம்பூர், ஜனவரி-22 – பல்கலைக்கழக மாணவர் அறிமுக நிகழ்வில் முஸ்லீம் அல்லாத மாணவர்கள் இஸ்லாத்தைத் தழுவக் கட்டாயப்படுத்தப்பட்டதாகவும், அதன் பின்னணியில் தாங்கள் இருப்பதாகவும் கூறப்படுவதை மலேசிய இஸ்லாமிய மேம்பாட்டுத் துறையான JAKIM திட்டவட்டமாக மறுத்துள்ளது.
வெளிநாட்டு இணையச் செய்தி ஊடகம் வெளியிட்டுள்ள அக்குற்றச்சாட்டு அடிப்படையற்றது.
அதனைக் கடுமையாகக் கருதுகிறோம் என இன்று வெளியிட்ட அறிக்கையில் JAKIM கூறியது.
அவ்விவகாரம் தொடர்பில் சம்பந்தப்பட்ட பல்கலைக்கழகம் ஏற்கனவே விளக்கமளித்து விட்டது; இந்நிலையில் உண்மைக்குப் புறம்பான தகவல்கள் வெளியாகியிருப்பது வருத்தமளிக்கிறது.
மலேசியா குறித்து செய்தி வெளியிடும் வெளிநாட்டு ஊடகங்கள், உள்ளூர் சட்டத் திட்டங்களை மதித்து பொறுப்போடு நடந்துகொள்ள வேண்டும் என்றும் JAKIM தலைமை இயக்குநர் டத்தோ Dr சிராஜூடின் சாஹாய்மி கேட்டுக் கொண்டார்.
முஸ்லீம் அல்லாத மாணவர்கள் மதபோதனை, சமூக அழுத்தம், மிரட்டல் உள்ளிட்ட பல்வேறு தந்திரங்கள் வாயிலாக மதமாற்றம் செய்யப்படுவதாக, பெயர் குறிப்பிடாத தரப்புகளை மேற்கோள் காட்டி, Persecution.org | International Christian Concern எனும் அந்த வெளிநாட்டு ஊடகம் முன்னதாக செய்தி வெளியிட்டிருந்தது.
அப்படி மதம் மாறிய மாணவர்கள் அதனை குடும்பத்தாரிடம் சொல்லாமல் மூடி மறைப்பதாகவும் அச்செய்தி கூறிக்கொண்டது.