
கோலாலம்பூர், ஜனவரி-26 – Ops Sky சோதனையில் அண்மையில் முறியடிக்கப்பட்ட நிதி ஆலோசக மோசடி கும்பலால் ஏமாற்றப்பட்டவர்களில் பெரும்பாலோரால், தாங்கள் வாங்கியக் கடனைத் திருப்பிச் செலுத்த முடியாது.
தங்களின் சக்திக்கு மேற்பட்டு அவர்கள் கடன் வாங்கியிருப்பதே அதற்குக் காரணமென, மலேசிய ஊழல் தடுப்பாணையமான MACC கூறியது.
அவர்களில் சிலர், தங்களின் வருமானத்தை விட 3 மடங்கு அதிகமாக கடன் வாங்கியுள்ளனர்.
இன்னும் சிலர், ஒரே சமயத்தில் பல்வேறு வங்கிகளில் மூன்றிலிருந்து நான்கு கடன்கள் வரை பெற்றுள்ளனர்.
எனவே, இடைப்பட்ட காலத்தில் அக்கடன்களை அவர்கள் திருப்பிச் செலுத்த சாத்தியமில்லை என, MACC தலைவர் தான் ஸ்ரீ அசாம் பாக்கி கூறினார்.
ஒருவர் 1 மில்லியன் ரிங்கிட் வரை கடன் வைத்துள்ளார்; மாதந்தோறும் அவர் 12,000 ரிங்கிட்டை தவணைப் பணமாகச் செலுத்த வேண்டியுள்ளது; அது அவரின் மாதச் சம்பளத்தை விட அதிகமாகும் என அசாம் பாக்கி சுட்டிக் காட்டினார்.
வங்கி அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுத்து CCRIS கடன் மதீப்பிட்டுத் தகவல்களை மாற்றியமைத்து, ஒரே நேரத்தில் பல வங்கிகளில் கடன் விண்ணப்பங்கள் அங்கீகரிக்கப்படுவதை அக்கும்பல் உறுதிச் செய்கிறது.
இதனால் கடைசியில் ‘கழுத்தை நெறிக்கும்’ அளவுக்கு மக்கள் கடனில் சிக்கிக் கொள்கின்றனர் என்றார் அவர்.
இந்த நிதி ஆலோசக மோசடி தொடர்பில், 18 வங்கியாளர்கள், 8 நிறுவன இயகுநர்கள், ஒரு ஏஜன்ட் என இதுவரை 27 பேர் கைதாகியுள்ளனர்.