
கோலாத் திரெங்கானு, ஜன 27 – போலீஸ் அதிகாரிகள் எனக் கூறிக்கொண்ட கைதொலைபேசி இணைய மோசடிக் கும்பலினால் ஓய்வு பெற்ற அரசு ஊழியரான பெண்மணி ஒருவர் 150,000 ரிங்கிட்டிற்கு மேல் இழப்புக்கு உள்ளானார்.
சட்டவிரோத பண பறிமாற்றம் மற்றும் குடிநீர் மீட்டரை தவறாக பயன்படுத்தியது தொடர்பில் கைது வாராண்ட் இருப்பதாக சந்தேகப் பேர்வழி ஒருவன் அந்த 68 வயது பெண்ணிடம் ஜனவரி 16ஆம் தேதி தொடர்பு கொண்டுள்ளான் .
இதனைத் தொடர்ந்து விசாரணைக்காக தம்மிடம் இருக்கும் மூன்று வங்கிக் கணக்குகள் தொடர்பான விவரங்களை வழங்கும்படியும் அந்த பெண்ணுக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
மேலும், தனது Debit கார்டை பிளாஸ்டிக் பையில் போட்டு வீட்டின் முன்புறம் உள்ள மரங்களுக்கு இடையே வைக்குமாறும் அவருக்கு வலியுறுத்தப்பட்டுள்ளது.
இதனைத் தொடர்ந்து மூன்று வங்கிக் கணக்குகளில் இருந்தும் அதிக அளவில் பணம் பிடித்தம் செய்யப்பட்டதாக அப்பெண் அறிவிப்பை பெற்றுள்ளார்.
அதன்பிறகு வங்கியில் நேரடியாக தொடர்புகொண்டபோது ஏ.டி.எம் (ATM) இயந்திரத்தின் வாயிலாக நான்கு வங்கிக் கணக்குகளுக்கு 55 முறை பணப் பட்டுவாடா செய்யப்பட்டதை அறிந்து அந்த பெண் பெரும் அதிர்ச்சிக்கு உள்ளானதோடு இது குறித்து போலீசில் புகார் செய்ததாக கோலாத் திரெங்கானு (Kuala Terengganu) மாவட்ட போலீஸ் தலைவர் துணை கமிஷனர் அஸ்லி முகமட் நோர் ( Azli Mohd Nor ) தெரிவித்தார். இச்சம்பவம் குறித்து தண்டனைச் சட்டத்தின் 420 ஆவது விதியின் கீழ் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.