
ஷா ஆலாம், பிப்ரவரி-2 – விரைவுப் படகுகள் மூலம் மலேசியாவுக்குள் நுழைவதற்கான சட்டவிரோதப் பாதைகளை விளம்பரப் படுத்தும் டிக் டோக் கணக்குகளை, போலீஸ் அணுக்கமாகக் கண்காணித்து வருகிறது.
அதே சமயம் தகவல் தெரிந்தோரும் VSP எனப்படும் தன்னார்வ விவேகக் கைப்பேசி ரோந்து செயலி வழியாகப் புகாரளிக்குமாறு, சிலாங்கூர் போலீஸ் தலைவர் டத்தோ ஹுசேய்ன் ஓமார் கான் (Datuk Hussein Omar Khan) கேட்டுக் கொண்டார்.
வெளிநாட்டினர் சட்டவிரோதமாக நுழைவதைத் தடுக்கும் நடவடிக்கைகளை ஒருங்கிணைக்க, இதுபோன்ற தகவல்களை போலீஸார் தொடர்ந்து கண்காணித்து வருவதாக FMT-யிடம் அவர் தெரிவித்தார்.
சுராபாயா, லோம்போக், தஞ்சோங் பாலாய் போன்ற பல்வேறு இடங்களிலிருந்து இந்தோனீசியர்களை மலேசியாவுக்குக் கச்சிதமாகக் கொண்டுச் சேர்க்க முடியுமெனக் கூறி, டிக் டோக்கில் உலா வரும் சில வீடியோக்கள் குறித்து அவர் கருத்துரைத்தார்.
அச்சேவைக்கு, தலைக்கு 1,600 ரிங்கிட்டிலிருந்து 2,900 ரிங்கிட் கட்டணமாக விதிக்கப்படுகிறது.
இங்கு வந்ததும், ஜோகூர், கிளந்தான், சிலாங்கூரின் கிள்ளான் துறைமுகம் உள்ளிட்ட இடங்களுக்கு போக்குவரத்து வசதியும் செய்துத் தரப்படுகிறதாம்.
இந்தோனீசியர்கள் மலேசியாவிலிருந்து தாயகம் திரும்பும் சேவையையும் அச்சட்டவிரோத கும்பல் வழங்கி வருவதாகக் கூறப்படுகிறது.