அமெரிக்காவிலிருந்து வெளியேற்றப்படும் அபாயத்தில் உள்ள 1.44 மில்லியன் பேரில் 435 மலேசியர்களும் அடங்குவர்

வாஷிங்டன், பிப்ரவரி-6 – சுமார் 435 மலேசியர்கள் அமெரிக்காவிலிருந்து நாடு கடத்தப்படும் சூழலை எதிர்நோக்கியுள்ளனர்.
அமெரிக்க குடிநுழைவு மற்றும் சுங்க அமலாக்கத் துறையான ICE-யிடமிருந்து அவர்களுக்கு இறுதி உத்தரவுக் கிடைத்துள்ளதாகக் கூறப்படுகிறது.
நாடு கடத்தல் ஆணைக் கிடைக்கப் பெற்றுள்ள பல்வேறு நாடுகளைச் சேர்ந்த 1.44 மில்லியன் பேரில் இவர்களும் அடங்குவர்.
இந்த 435 மலேசியர்களும் தற்போது ICE-யின் தடுப்புக்காவல் அல்லாத பட்டியலில் இருக்கின்றனர்.
இவ்வேளையில், அவ்வுத்தரவு குறித்து தங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பு எதுவும் இன்னும் கிடைக்கவில்லை என, வாஷிங்டனில் உள்ள மலேசியத் தூதரகம் கூறியுள்ளது.
பாதிக்கப்பட்ட மலேசியர்களிடமிருந்தும் இதுவரை உதவிக் கோரி விண்ணப்பம் வரவில்லை; என்றாலும், அவ்விவகாரம் தொடர்பில் அங்குள்ள அதிகாரத் தரப்புடன் தொடர்பிலிருப்பதாக, தூதரகம் அறிக்கையொன்றில் கூறியது.
டோனல்ட் டிரம்ப் இரண்டாவது முறையாக அமெரிக்க அதிபராகப் பதவியேற்ற பிறகு அவர்களுக்கு இந்த நாடு கடத்தல் உத்தரவுகள் வழங்கப்பட்டன.
இந்த உத்தரவுகளைப் பெற்ற வெளிநாட்டினர், சித்திரவதைக்கு எதிரான ஐ.நா பிரகடனத்தின் கீழ் தொடர்ந்து அமெரிக்காவில் அகதிகளாக தஞ்சம் கோரலாம்.
என்றாலும், தங்கள் குடிமக்கள் திரும்புவதை அந்தந்த நாடுகள் ஏற்றுக்கொள்வதையே வாஷிங்டன் ஊக்குவிக்கிறது.
இணங்கத் தவறினால் அந்நாடு “ஒத்துழைக்காதது” அல்லது “இணக்கமற்றதாக இருக்கும் அபாயத்தில் உள்ளது” என வகைப்படுத்தப்படலாம்.
தற்போது, சீனா, இந்தியா, பாகிஸ்தான் உட்பட 15 நாடுகள் ஒத்துழைக்காத நாடுகளாக பட்டியலிடப்பட்டுள்ளன;
அதே சமயம், வியட்நாம், ஈராக் போன்ற 11 நாடுகள் இணங்க மறுக்கும் அபாயத்தைக் கொண்ட நாடுகளாக உள்ளன.