
கோலாலம்பூர், பிப்ரவரி-14 – சொஸ்மா எனப்படும் 2012 பாதுகாப்புக் குற்றங்களுக்கான சிறப்புச் சட்டத்தை அரசாங்கம் மறு ஆய்வு செய்யவுள்ளது.
சொஸ்மா தடுப்புக் கைதிகள் சம்பந்தப்பட்ட அண்மையச் சம்பவத்தை அடுத்து, உள்துறை அமைச்சுக்கு அமைச்சரவை அவ்வாறு உத்தரவிட்டது.
நீண்ட காலமாகவே சர்ச்சைக்குள்ளாகி வரும் அச்சட்டத்தின் குறிப்பிட்ட அம்சங்களை மேம்படுத்த அரசாங்கம் கொள்கையளவில் இணங்கியிருப்பதாக, ஒற்றுமை அரசாங்கத்தின் பேச்சாளர் ஃபாஹ்மி ஃபாட்சில் கூறினார்.
இந்த மறு ஆய்வு குறித்த மேல் விவரங்களை உள்துறை அமைச்சர் டத்தோ ஸ்ரீ சைஃபுடின் நாசூத்தியோன் இஸ்மாயில் அடுத்த வாரம் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்வார் என ஃபாஹ்மி சொன்னார்.
முன்னதாக, சுங்கை பூலோ சிறைச்சாலையில் சொஸ்மா கைதிகள் தாக்கப்பட்டதாக புகார்கள் எழுந்தது குறிப்பிடத்தக்கது.
எனினும், சிறைச்சாலைத் துறை மேற்கொண்ட விரிவான விசாரணையில், அப்புகார்களில் உண்மையில்லை என கண்டறியப்பட்டது.
இந்த சொஸ்மா சட்டம், முன்பு மகாதீர் காலத்தில் பெரும் சர்ச்சைக்குள்ளான ISA எனப்படும் உள்நாட்டு பாதுகாப்புச் சட்டத்தைப் போன்றே ‘கொடுமையானது’ என பல்வேறு தரப்புகளால் விமர்ச்சிக்கப்பட்டு வருகிறது.