
பெய்ஜிங், பிப்ரவரி-15 – அமெரிக்காவின் typhon இடைநிலை ஏவுகணையை திரும்பப் பெறுமாறு பிலிப்பின்ஸை சீனா வலியுறுத்தியுள்ளது.
ஏவுகணை அமைப்பை அறிமுகப்படுத்துவதன் மூலம், அந்த தென்கிழக்காசிய நாடு அதன் வாக்குறுதிகளை மீறுவதாக பெய்ஜிங் குற்றம் சாட்டியது.
இந்த ஏவுகணை அமைப்பு ஆசியாவில் பலவிதமான கப்பல் எதிர்ப்பு ஆயுதங்களைக் குவிக்கும் அமெரிக்காவின் நடவடிக்கையின் ஒரு பகுதியாகும்.
2024-ல் பயிற்சியின் போது முதன் முதலில் அந்த ஏவுகணை பயன்படுத்தப்பட்ட போதே அதற்கு சீனா கடும் எதிர்ப்புத் தெரிவித்தது.
இந்நிலையில், பிலிப்பைன்ஸ் தனது தேசப் பாதுகாப்பை மற்றவர்களுக்கு விட்டுக்கொடுப்பது மட்டுமல்லாமல், புவிசார் அரசியல் மோதல் மற்றும் ஆயுதப் போட்டியின் அபாயங்களை இவ்வட்டாரத்திற்குள் அறிமுகப்படுத்துவதாக, சீன பாதுகாப்பு அமைச்சு குற்றம் சாட்டியது.
அந்த typhon ஏவுகணை அமைப்பு ஒரு தற்காப்பு நடவடிக்கை மட்டுமே என்பதுடன் அதனை மீட்டுக் கொள்வதாக ஒருபோதும் தாங்கள் வாக்குறுதி அளிக்கவில்லை என்றும், பிலிப்பின்ஸ் கூறியிருந்தற்கு பதிலடியாக பெய்ஜிங் அறிக்கை வெளியிட்டுள்ளது.
ஆயிரக்கணக்கான கிலோ மீட்டர் தூரம் வரை ஏவுகணைகளை ஏவக் கூடிய இந்த typhon பல்நோக்கு ஏவுகணை அமைப்பை, அமெரிக்க இராணுவம், கடந்த மாதம் பிலிப்பின்ஸில் உள்ள Laoag விமான நிலையத்திலிருந்து Luzon தீவில் உள்ள மற்றொரு தளத்திற்கு மாற்றியது.
பிலிப்பின்ஸிலிருந்து சீனாவையும் ரஷ்யாவையும் குறி வைத்து தாக்கும் ஆற்றலை அது பெற்றிருப்பது குறிப்பிடத்தக்கது.