
புத்ராஜெயா, பிப்ரவரி-24 – EPF எனப்படும் ஊழியர் சேமநிதி வாரியத்தின் அடைவுநிலை கடந்தாண்டின் மூன்றாவது காலாண்டில் ஊக்கமளிக்கும் வகையில் இருப்பதன் அடிப்படையில், சந்தாத்தாரர்கள் நல்ல இலாப ஈவை எதிர்பார்க்கலாம்.
இரண்டாவது நிதியமைச்சர் டத்தோ ஸ்ரீ அமிர் ஹம்சா அசிசான் அதனைக் கோடி காட்டியுள்ளார்.
2024-கின் மூன்றாவது காலாண்டில் 57.5 பில்லியன் ரிங்கிட்டை EPF முதலீட்டு வருமானமாக ஈட்டியுள்ளது.
நான்காவது காலாண்டிலும் அந்நிலை நீடிக்கும் பட்சத்தில், முந்தைய ஆண்டை விட 2024-ஆம் ஆண்டுக்கான ஈவுத் தொகை நல்ல செய்தியைக் கொண்டு வருமென்றார் அவர்.
2023-ஆம் ஆண்டில் EPF-பின் வழக்கமான சேமிப்புகளுக்கு 5.50 விழுக்காடு இலாப ஈவு அறிவிக்கப்பட்டது.
அதுவே ஷரியா சேமிப்புகளுக்கு 5.40 விழுக்காடு இலாப ஈவு அறிவிக்கப்பட்டது.
கடந்தாண்டுக்கான EPF-பின் இலாப ஈவு 6 விழுக்காட்டுக்கும் மேல் இருக்குமென பொருளாதார நிபுணர்களும் கல்வியாளர்களும் கணித்திருப்பது குறிப்பிடத்தக்கது.
2024-ஆம் ஆண்டுக்கான இலாப ஈவு மார்ச் மாத தொடக்கத்தில் அறிவிக்கப்படுமென எதிர்பார்க்கப்படுகிறது.