சிரம்பானில் “மாட் ரெம்பிட்” கூடும் 15 இடங்களில் போலிஸ் முற்றுகை

சிரம்பான், பிப்ரவரி-25 – தாமான் பண்டார் சிரம்பான் செலாத்தானில் mat rempit அடாவடி கும்பல் ஒன்றுகூடும் இடமாக விளங்கி வந்த ஒரு கைவிடப்பட்ட கடைத் தொகுதியில், நெகிரி செம்பிலான் போலீசார் 15 சோதனை நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளனர்.
அவற்றில் பல்வேறு குற்றங்களுக்காக 199 சம்மன்கள் வெளியிடப்பட்டன.
மோட்டார் சைக்கிள்கள் மாற்றியமைக்கப்பட்டது, பக்கவாட்டு கண்ணாடிகள் இல்லாதது, மோட்டார் சைக்கிளோட்டும் உரிமம் இல்லாதது, exhausts குழாய்கள் மாற்றியமைக்கப்பட்டது போன்றவை அக்குற்றங்களில் அடங்கும்.
15 மோட்டார் சைக்கிள்கள் பறிமுதல் செய்யப்பட்ட வேளை, பெரும்பாலான குற்றவாளிகள் 15 முதல் 22 வயதுக்குட்பட்டவர்கள் ஆவர்.
2020 முதல் அந்த இடம் கண்காணிப்பில் இருந்து வருவதாக, மாநில போக்குவரத்து புலனாய்வு மற்றும் அமலாக்கத் துறையின் தலைவர் முஹமட் சாக்கி ரமாட் கூறினார்.
Mat rempit கும்பலின் சட்டவிரோத நடவடிக்கைகள் பிற சமூக பிரச்சினைகளுக்கும் வழிவகுக்கலாம் என, அப்பகுதி குடியிருப்பாளர்களிடையே கவலை நிலவுவதையும் அவர் ஒப்புக்கொண்டார்.
பொதுவாக ஞாயிற்றுக்கிழமை மாலைகளில் அக்கும்பல் அங்கு கூடுகின்றது; இது குடியிருப்பாளர்களிடையே பாதுகாப்பு குறிப்பாக அப்பகுதியில் விபத்துக்கள் ஏற்படலாமென்ற கவலையை அதிகரிக்கச் செய்துள்ளது.
எனவே, சட்டவிரோத மோட்டார் பந்தயங்களைத் தடுக்கவும், பொதுமக்களின் கவலைகளைத் தீர்க்கவும் இதுபோன்ற சோதனை நடவடிக்கைகள் தொடர்ந்து மேற்கொள்ளப்படுமென அவர் உறுதியளித்தார்.
பொது மக்களும், இது போன்ற சாலை அடாவடி கும்பல்கள் குறித்து அருகிலுள்ள போலீஸ் போக்குவரத்து புலனாய்வு மற்றும் அமலாக்கத் துறையில் புகாரளிக்கலாம்.