
கோலாலம்பூர், மார்ச்-4 – எரா மலாய் வானொலி நிலையத்தின் அறிவிப்பாளர்கள் இந்துக்களின் காவடி நடனத்தை ஏளனம் செய்த வீடியோ வைரலான விவகாரம், நாடாளுமன்றத்திலும் எதிரொலித்துள்ளது.
அச்சம்பவம் குறித்து இந்திய மக்கள் பிரதிநிதிகள் தங்களின் கடுமையான கண்டனத்தைப் பதிவுச் செய்தனர்.
சர்ச்சைக்குரிய அவ்வீடியோ தொடர்பாக தொடர்புத் துறை அமைச்சர் ஃபாஹ்மி ஃபாட்சில் உடனடி நடவடிக்கை எடுத்ததற்கு நன்றி தெரிவிக்கிறோம்.
இருப்பினும், இச்சம்பவம் கலாச்சார உணர்வின்மை தொடர்பான ஒரு ஆழமான பிரச்சினையை எடுத்துக்காட்டுவதால், இதுபோன்ற மரியாதைக்குறைவான செயல்கள் மீண்டும் நிகழாமல் இருப்பதை உறுதிச் செய்ய வேண்டும் என பத்து நாடாளுமன்ற உறுப்பினர் பி.பிரபாகரன் வலியுறுத்தினார்.
இச்சம்பவத்தில் ஈடுபட்ட வானொலி அறிவிப்பாளர்கள் மன்னிப்பு கேட்டுள்ளனர், ஆனால் மன்னிப்பு மட்டும் போதாது என்பதை நாங்கள் வலியுறுத்துகிறோம்.
இச்சம்பவத்திற்கு பொறுப்பானவர்கள் உரிய தண்டனையை எதிர்கொள்ள வேண்டும்; இது ஒரு சிறிய தவறு அல்ல, மாறாக ஒரு வெளிப்படையான மரியாதைக்குறைவான செயல்.
எனவே இதில் விரிவாக விசாரிக்க எதுவும் இல்லை என, மலேசிய இந்தியர் உருமாற்றப் பிரிவான மித்ராவின் தலைவருமான பிரபாகரன் சொன்னார்.
இவ்வேளையில், செனட்டர் டத்தோ சி.சிவராஜ், மேலவையில் இவ்விவகாரத்தை எழுப்பினார்.
இதுவொரு சாதாரணக் குற்றமல்ல; இந்துக்களின் நம்பிக்கையை வெளிப்படையாகவே இழிவுப்படுத்தும் கீழ்த்தரமான செயலாகும்.
இந்த இனவாதப் போக்கு இன்று இந்துக்களுக்கு நடந்திருக்கிறது, நாளை வேறு மதத்தவருக்கு நடக்கலாம். இது தொடர்கதையாவதை அனுமதிக்கப் போகிறோமா என சிவராஜ் கேள்வி எழுப்பினார்.
கலைத்துறை ஊடகங்கள் இது போன்ற செயல்களில் ஈடுபடுவது இது முறையல்ல; ஒவ்வொரு முறையும் மற்றவர் மனம் புண்படும் படி இப்படி எதையாவது செய்து விட்டு, மன்னிப்புக் கேட்பது வாடிக்கையாகி விட்டது.
இதை கேட்டு கேட்டு எங்களுக்கு அலுத்து விட்டதெனக் கூறிய சிவராஜ், ஏரா உண்மையிலேயே இனவாத வானொலி இல்லை என்பதை நிரூபிக்க விரும்பினால், அறிவிப்பாளர் Azad Jasmin-னை உடனடியாக பணியிலிருந்து நீக்க வேண்டுமென்றார்.
மலேசியத் தொடர்பு பல்லூடக ஆணையமான MCMC, ஏரா வானொலி மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் சிவராஜ் வலியுறுத்தினார்.
இதனிடையே, இந்துக்களை சினமூட்டும் வகையிலான அவ்வீடியோ குறித்து கடும் அதிர்ச்சித் தெரிவித்த சிலாங்கூர், கோத்தா கெமுனிங் சட்டமன்ற உறுப்பினர் பிரகாஸ் சம்புநாதன், போலீஸும், MCMC-யும் விரிவான விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க வேண்டுமென வலியுறுத்தினார்.
மற்றொரு மதத்தாரின் நம்பிக்கையை இழிவுப்படுத்தியதற்காக ஏரா வானொலியின் உரிமத்தை அரசாங்கம் இரத்துச் செய்ய வேண்டுமென்றும் அவர் கேட்டுக் கொண்டார்.
இந்நிலையில், ஏராவின் பொறுப்பற்றச் செயல் குறித்து அரசு சாரா இயக்கங்களும் தனிநபர்களும் போலீஸில் புகாரளிக்க வேண்டுமென, பினாங்கு பாகான் டாலாம் சட்டமன்ற உறுப்பினர் குமரன் கிருஷ்ணன் கேட்டுக் கொண்டார்.
ஏரா மீது போலீஸும், MCMC-யும் நடவடிக்கை எடுக்க வேண்டிய அதே வேளை, இது போன்ற சம்பவங்கள் மீண்டும் நிகழாதிருக்க, அவ்வானொலி நிர்வாகம் தனது பணியாளர்களுக்கு உரியப் பயிற்சிகளை வழங்க வேண்டுமென்றார் அவர்.
இவ்வேளையில், ஏரா வானொலியின் அச்செயல் குறித்து கடும் கண்டனம் தெரிவித்த பாஸ் கட்சியின் ஆதரவாளர் மன்றமான DHPP, கடும் நடவடிக்கைக்கு அது உட்படுத்தப்பட வேண்டுமென வலியுறுத்தியது.
மற்ற மதங்களை இழிவுப்படுத்துவதை இஸ்லாம் தடைச் செய்கிறது; இப்படியிருக்க ஏரா அறிவிப்பாளர்களின் செயல் அதனை மீறும் வகையில் உள்ளது.
இவ்விஷயத்தில் பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் தலையிட்டு நீதியை நிலைநாட்டுவாரா என அம்மன்றத்தின் இளைஞர் பிரிவுத் தலைவர் பாலேந்திரன் பாலசுப்ரமணியம் கேள்வியெழுப்பினார்.