
சிரம்பான், மார்ச்-5 – போர்டிக்சன், புக்கிட் பெலாண்டோக்கில் இன்று 100 பன்றிகளின் சடலங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தனியார் செம்பனைத் தோட்டத்தில் அவற்றை கண்டெடுத்து பொது மக்கள் போலீஸுக்கு தகவல் கொடுத்துள்ளனர்.
இதையடுத்து அப்பகுதியில் கண்காணிப்பு மற்றும் அமுலாக்க நடவடிக்கைகளை மேம்படுத்துமாறு, நெகிரி செம்பிலான் கால்நடை சேவைத் துறைக்கும் போலீஸ் உட்பட அதிகாரத் தரப்புகளுக்கும் மந்திரி பெசார் உத்தரவிட்டுள்ளார்.
புக்கிட் பெலாண்டோக்கில் பன்றி வளர்ப்புக் கிடையாது; ஆனால் பன்றிகளின் சடலங்கள் அங்கு வீசப்பட்டுள்ளன என டத்தோ ஸ்ரீ அமினுடின் ஹருண் சொன்னார்.
இச்செயலானது நில உரிமையாளருக்கு அசௌகரியத்தை ஏற்படுத்துகிறது; அதே சமயம் உள்ளூர் மக்களின் உணர்ச்சிகளையும் மதிக்காத செயல்.
வீசப்படும் பன்றிகளின் சடலங்களால் அப்பகுதியே துர்நாற்றம் வீசுகிறது; மக்களின் ஆரோக்கியத்துக்கு கேடு விளைவிப்பதுடன் சுற்றுச் சூழல் தூய்மைக்கும் வித்திடுவதாக மந்திரி பெசார் கூறினார்.
இதற்கு முன் பிப்ரவரி 13-ஆம் தேதி போர்டிக்சன், தானா மேரா சைட் ஏ (Site A) பகுதியில் பன்றிகளின் சடலங்கள் கண்டெடுக்கப்பட்டன.
இதைத் தொடர்ந்து, பன்றிக் கழிவுகளிலிருந்து நோய் பரவுவதைத் தடுக்க, சம்பந்தப்பட்ட இடத்தில் கிருமிநாசினி தெளிப்பு நடவடிக்கைகளை கால்நடை சேவைத் துறை மேற்கொண்டது.