Latestமலேசியா

இஸ்லாத்தைப் பற்றி எங்களுக்கு சொல்லிக் கொடுக்க ஷக்கிர் நய்க் யார்? – நஸ்ரி அசிஸ் கேள்வி

கோலாலம்பூர், மார்ச்-6 – சர்ச்சைக்குரிய மத போதகர் Dr ஷக்கிர் நய்க் தொடர்ந்து மலேசியாவில் நடமாடி வருவதை முன்னாள் அமைச்சர் டத்தோ ஸ்ரீ நஸ்ரி அசிஸ் சாடியுள்ளார்.

இந்தியாவில் பிரச்னை செய்து விட்டு இங்கு ஓடி வந்தவர், முஸ்லீம்களாக வாழ்வது எப்படி என்றும், முஸ்லீம் அல்லாதோருடன் பழகுவது எப்படி என்றும் நமக்கு பாடமெடுக்கிறார்.

இந்த நாட்டில் பிறந்து வளர்ந்த எங்களுக்கு முஸ்லீமாக வாழ்வதெப்படி என்று தெரியாதா என அமெரிக்காவுக்கான மலேசிய முன்னாள் தூதருமான நஸ்ரி கேள்வியெழுப்பினார்.

இது பல்லின மக்கள் மற்றும் பல மத நம்பிக்கைகளைக் கொண்ட நாடு; நானே முஸ்லீம் அல்லாத மலேசியர்களுடன் அணுக்கமாகப் பழகி வருகிறேன் என, முன்னாள் அமைச்சருமான நஸ்ரி FMT-யிடம் கூறினார்.

ஷக்கிர் நய்க்கிற்கு மலேசியாவில் பொது இடங்களில் சொற்பொழிவாற்ற தடையேதும் இல்லை; அவருக்கு இருந்த தடை 2019-ஆம் ஆண்டோடு முடிந்து விட்டதென, பிப்ரவரி 21-ஆம் தேதி உள்துறை அமைச்சர் டத்தோ ஸ்ரீ சைஃபுடின் நாசூத்தியோன் இஸ்மாயில் அறிவித்திருந்தார்.

வங்காளதேசத்தின் டாக்காவில் உள்ள ஒரு பேக்கரியில் 5 தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 29 பேர் கொல்லப்பட்டதைத் தொடர்ந்து, வெறுப்புப் பேச்சுக்களை வெளியிட்டதற்காக நய்க் மீது இந்தியாவில் வழக்கு போடப்பட்டது.

பணமோசடி குற்றச்சாட்டும் எழுந்ததால் 2016 முதல் அவர் நாடு கடந்து வாழ்ந்து வந்தார்.

இந்நிலையில், 2019 ஜூனில், இந்திய வெளியுறவு அமைச்சு, நய்க்கை நாடு கடத்துவதற்காக மலேசியாவிடம் முறைப்படி கோரிக்கையை விடுத்தது.

அதே மாதத்தில், இந்தியாவில் உள்ள ஒரு நீதிமன்றமும் நய்க்கை ஒரு வழக்கில் நேரில் முன்னிலையாகுமாறு உத்தரவிட்டது குறிப்பிடத்தக்கது.

2018-ஆம் ஆண்டு அடைக்கலம் வழங்கப்பட்டதிலிருந்து நய்க் புத்ராஜெயாவில் எங்கோ வசித்து வருவதாக நம்பப்படுகிறது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!