
ஹைதராபாத் , மார்ச்-7- தூக்க மாத்திரை சாப்பிட்டு தற்கொலைக்கு முயன்றதாக வெளியான வதந்திகளை, பிரபல தமிழ் – தெலுங்கு திரைப்படப் பின்னணி பாடகி கல்பனா ராகவேந்தர் மறுத்துள்ளார்.
சுயநினைவற்ற நிலையில் ஹைதராபாத்தில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பிறகு, முதன் முறையாக வெளியிட்ட வீடியோவில் கல்பனா அதனைத் தெளிவுப்படுத்தினார்.
கடுமையான தூக்கமின்மையால் பாதிக்கப்பட்டதால் தவறுதலாக கூடுதல் மாத்திரைகளை உட்கொண்டதே அப்பிரச்னைக்குக் காரணம்.
மற்றபடி, குடும்பத்தில் பிரச்னை, அதனால் தற்கொலைக்கு முயன்றேன் என்பதெல்லாம் வீண் வதந்தி என அவர் சொன்னார்.
சரியான நேரத்தில் மருத்துவமனையில் கொண்டு சேர்த்த கணவருக்கும், உயிரைக் காப்பாற்றிய மருத்துவர்களுக்கும் தாம் நன்றிக்கடன் பட்டிருப்பதாகவும் கல்பனா கூறினார்.
முன்னதாக, கல்பனா தங்கியிருந்த வீட்டின் கதவு சில நாட்களாகத் திறக்கப்படாமல் இருந்ததால், சந்தேகத்தில் போலீஸார் வரவழைக்கப்பட்டனர்.
கதவை உடைத்து வீட்டுக்குள் நுழைந்த போலீஸார் பேச்சு மூச்சின்றி கிடந்த கல்பனாவை மருத்துவமனையில் சேர்த்தனர்.
அவரை பரிசோதித்த மருத்துவர்கள், கல்பனா அதிகமான தூக்க மாத்திரைகளை விழுங்கிதை கண்டறிந்தனர்.
இதையடுத்து கல்பனா தற்கொலைக்கு முயன்றதாக இந்திய ஊடகங்களில் செய்திகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தின.