
சிட்னி, மார்ச்-14 -ஆஸ்திரேலியாவைப் பூர்வீகமாகக் கொண்ட அழகான பாலூட்டி இனமான வொம்பாட்டின் (wombat) குட்டியை, அதன் தாயிடமிருந்து பறித்து இன்புற்ற அமெரிக்க சமூக ஊடக பிரபலத்திற்கு கண்டனங்கள் வலுத்து வருகின்றன.
சாம் ஜோன்ஸ் என்ற அப்பெண்ணின் செயல் ஏற்கனவே இயற்கை மற்றும் வனவிலங்கு ஆர்வலர்களை கோபப்படுத்தியுள்ள நிலையில், தற்போது ஆஸ்திரேலியப் பிரதமர் அந்தோணி அல்பானீஸும் அவரை சாடியுள்ளார்.
“தைரியமிருந்தால் ஒரு முதலைக் குட்டியை அதன் தாயிடமிருந்து எடுத்து பாருங்களேன், அப்போது தெரியுமென என்ன நடக்குமென்று” என அல்பானீஸ் காட்டமாகக் கேட்டார்.
தன்னை ஒரு “வெளிப்புற ஆர்வலர் மற்றும் வேட்டைக்காரர்” என்று அழைத்துக் கொள்ளும் அப்பெண், சாலையோரமிருந்த அந்த வொம்பாட் குட்டியைத் தூக்கிக் கொண்டு காரை நோக்கி ஓடுவது, வைரலான வீடியோவில் தெரிகிறது.
கலவரமடைந்த தாய் வொம்பாட் செய்வதறியாது அப்பெண்ணிண் பின்னால் ஓடி வருவது பார்ப்பவர்களையே பதற வைக்கிறது.
ஜோன்ஸ் வொம்பாட் குட்டியைத் தூக்கி வருவதை காருக்குள் இருந்தவாறு வீடியோவில் பதிவுச் செய்யும் ஆடவர் சிரிப்பதையும் கேட்க முடிகிறது.
கண்டனங்கள் குவிந்ததும், “ஒரு நிமிடத்திற்கும் குறைவாகவே குட்டியை கையில் வைத்திருந்தேன்; பிறகு பாதுகாப்பாக அதன் தாயிடமே விட்டு விட்டேன்” என ஜோன்ஸ் வீடியோவின் கீழ் பதிவிட்டார்.
என்றாலும் கண்டனங்கள் தொடரவே, விடியோவை நீக்கி விட்டு, தானது சமூக ஊடகக் கணக்குகளை அவர் private ஆக்கி விட்டார்
ஜோன்சின் பொறுப்பற்றச் செயலால் வொம்பாட் குட்டியின் உயிருக்கே ஆபத்து வரலாம்; அதன் தாயும் மன் உளைச்சலுக்கு ஆளானது; இது கண்டிக்கத்தக்கது என இயற்கை ஆர்வலர்கள் கொதித்துப் போயுள்ளனர்.
அப்பெண்ணையும் அவருடன் இருந்த ஆடவரையும் உடனடியாக நாடு கடத்தக் கோரி பெட்டிஷனும் போடப்பட்டுள்ளது.
இதுவரை 10,000 பேருக்கும் மேல் அதில் கையெழுத்திட்டுள்ளனர்.
இது குறித்து கருத்துரைத்த ஆஸ்திரேலிய உள்துறை அமைச்சர் தோனி பர்க், இனியொரு முறை ஆஸ்திரேலிய விசாவுக்கு விண்ணப்பித்தால் என்ன நடக்கும் என்பது இப்போதே அவருக்குப் புரிந்திருக்கும்; இனியும் அவர் துணிய மாட்டார் என்றே தோன்றுவதாக சொன்னார்.