
ஜோகூர் பாரு, மார்ச்-15 – கவர்ச்சிகரமான இலாபம் கிடைக்கும் என்ற ஆசை வார்த்தைகளால் முதலீட்டுத் மோசடியில் சிக்கி 2.3 மில்லியன் ரிங்கிட் பெரும் பணத்தை இழந்துள்ளார், ஜோகூரைச் சேர்ந்த ஒரு முதியவர்.
62 வயது அந்நபர் வியாழக்கிழமை அது குறித்து புகார் செய்ததாக, ஜோகூர் போலீஸ் தலைவர் டத்தோ எம். குமார் கூறினார்.
பங்குச் சந்தை முதலீடு குறித்து முன்பின் தெரியாத நபரால் வாட்சப் வழியாக அவருக்கு தகவல் வந்துள்ளது.
பின்னர் ஒரு வாட்சப் குழுவில் சேர்க்கப்பட்டு, முதலீட்டை நிர்வகிக்கவும் இலாபத்தை கண்காணிக்கவும் ஓர் இணையத் தளத்தின் முகவரியும் அவரிடம் கொடுக்கப்பட்டது.
35 மில்லியன் வரை இலாபம் பார்க்கலாமென நம்ப வைக்கப்பட்டதால், கொடுக்கப்பட்ட 4 உள்ளூர் வங்கிக் கணக்குகளுக்கு 4 தடவையாக அவர் பணத்தை மாற்றியுள்ளார்.
கடந்தாண்டு நவம்பர் 27 முதல் இவ்வாண்டு மார்ச் 4 வரை அந்நபர் அப்படி மாற்றிய தொகை 2.336 மில்லியன் ரிங்கிட்டாகும்.
ஆனால் இலாபத் தொகையை மீட்க முடியவில்லை; கேட்டால் மேலும் முதலீடு செய்ய வேண்டுமென நெருக்குதல் கொடுக்கப்பட்ட போதே, தாம் ஏமாற்றப்பட்டிருப்பதை உணர்ந்து போலீஸில் புகார் செய்தார்.
அம்மோசடி குற்றவியல் சட்டத்தின் 420-ஆவது பிரிவின் கீழ் விசாரிக்கப்படுவதாகக் கூறிய டத்தோ குமார், முதலீட்டுத் திட்ட மோசடி குறித்து மேலதிக கவனத்தோடு இருக்குமாறு மக்களைக் கேட்டுக் கொண்டார்.