
கோலாலம்பூர், மார்ச்-18 – ‘ஐகாட்’ படப் புகழ் இயக்குநர் சஞ்சய் பெருமாள் புதிதாக இயக்கியுள்ள ‘மாச்சாய்’ திரைப்படம், IFFR எனப்படும் நெதர்லாந்தின் பிரசித்திப் பெற்ற ரோட்டர்டாம் திரைப்பட விழாவுக்குத் தகுதிப் பெற்றுள்ளது.
Big Screen Competition பிரிவில் முன்மொழியப்பட்ட ஒரே மலேசியத் திரைப்படம் இதுவாகும்.
கடைசியில் விருது சுவீடன் நாட்டின் ‘Raptures’ என்ற படத்திற்கே கிடைத்தாலும், உலக அரங்கில் ஒரு மலேசியத் தமிழ்ப் படம் திரையீடு கண்டதே பெரும் சாதனையாகும்.
IFFR பட விழாவின் ஆகப் பெரிய IMAX திரையரங்கில், பிப்ரவரி 2-ஆம் தேதி ‘மாச்சாய்’ படத்தின் world premiere காட்சி இடம் பெற்றது.
பல்வேறு சினிமா பின்னணியிலிருந்து வந்த கலைஞர்களால் அரங்கம் நிறைந்த காட்சியாக ‘மாச்சாய்’ திரையீடு கண்டது, தனிச் சிறப்பு மிக்க அனுபவம் என சஞ்சய் பூரிப்புடன் கூறினார்.
Skyzen Studios தயாரிப்பான ‘மாச்சாய்’ லிங்கபுரா என்ற கற்பனை நாட்டில் போதைப்பொருள் கும்பலைச் சேர்ந்த சியாம் என்பவர், கொடூர குணம் வாய்ந்த முதலாளியின் பொருளைத் தொலைத்து அதனைத் தேடி அலைவதை கதைக்களமாகக் கொண்டுள்ளது.
அதிரடி திருப்பங்களுடன் கூடிய ‘மாச்சாய்’ திரைக்கதையை எழுதுவது உள்ளிட்ட ஆரம்ப வேலைகளுக்கு 4 ஆண்டுகள் பிடித்தாலும், படப்பிடிப்பு குறிப்பிட்ட நாட்களிலேயே முடிந்து விட்டதாக சஞ்சய் சொன்னார்.
“‘ஜகாட்’ படத்தின் இராண்டாம் பாகத்தை எடுக்குமாறு பலர் எனக்கு ஆலோசனைக் கூறினர்; ஆனால் நான் பாதுகாப்பான எளிய வழியை விரும்பவில்லை; சவாலை விரும்பினேன்; அதன் வெளிப்பாடு தான் ‘மாச்சாய்'” என்கிறார் சஞ்சய்.
கர்ணன் கணபதி முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கும் ‘மாச்சாயில்’ குபன் மகாதேவன், இர்ஃபான் சாய்னி, ஃபாபியன் லூ, சுபாஷினி அசோகன், சூசன் லேங்கேஸ்டர் என ஒரு பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்துள்ளது.
அனைத்துலக அங்கீகாரம் பெற்று விட்ட ‘மாச்சாய்’ தற்போது மலேசியத் திரையீட்டுக்குக் காத்திருக்கிறது.
திரைக்கு வரும் போது, ‘ஜகாட்டை’ போன்றே உள்ளூர் சினிமா விரும்பிகளாலும் இரசிகர்களாலும் ‘மாச்சாய்’ கொண்டாடப்படும் என நம்புவோம்.