
கோலாலம்பூர், ஏப் 16 – UiTMK எனப்படும் மாரா தொழிற்நுட்ப பல்கலைக்கழகத்தின் Dengkil வளாக மாணவர்கள் குழு கு க்ளக்ஸ் கிளான் (KKK ) சீருடைகளை அணிந்திருந்த வைரலான வீடியோவை போலீசார் இன பாகுபாடு தொடர்பில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
நேற்று இரவு மணி 7.24க்கு அந்த வீடியோ குறித்த புகார் கிடைத்ததாக Sepang போலீஸ் தலைவர் நோர்ஹிசாம் பஹாமான் ( Norhizam Bahaman ) தெரிவித்திருக்கிறார் என இணைய பதிவேடு ஒன்று தகவல் வெளியிட்டது.
சமகால உலகளாவிய மற்றும் சட்ட சிக்கல்கள் என்ற பாடத்திற்கான ஒரு பணியின் ஒரு பகுதியாக இந்த வீடியோ இருப்பதாகவும், அமெரிக்காவில் கறுப்பின சமூகத்திற்கு எதிராக தீவிரவாத KKK தரப்பினர் வரலாற்று ரீதியாக ஒடுக்குமுறையை மீண்டும் சித்தரிக்கும் விதமாகவும் இந்த வீடியோ இடம்பெற்றுள்ளதாகக் குறிப்பிடுகின்றன என்று தொடக்கக் கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளதாக இன்று வெளியிட்ட அறிக்கையொன்றில் அவர் மேற்கோள் காட்டினார்.
இனப் பாகுபாடு மற்றும் அதை நிவர்த்தி செய்ய புதிய சட்டங்கள் எவ்வாறு இயற்றப்பட்டன என்பது பற்றிய புரிதலை வளர்ப்பதை நோக்கமாகக் கொண்டதாக இந்த வீடியோ உள்ளடக்கம் இருப்பதாக அவர் மேலும் கூறினார்.
பொதுமக்கள் எந்தவிதமான ஆருடங்களையும் அல்லது தவறான செய்திகளையும் வெளியிடுவதைத் தவிர்க்குமாறு அவர் கேட்டுக்கொண்டார். வெள்ளை அங்கி மற்றும் கூர்மையான முக்காடுகளில் KKK ஐப் பிரதிபலிக்கும் UiTM மாணவர்களின் கிளிப்புகள் இந்த வாரம் சமூக ஊடகங்களில் வைரலாகி, சீற்றத்தையும் ஆன்லைனில் பரவலான கண்டனத்தையும் தூண்டின.
எனினும் இந்த நிகழ்வில் பங்கேற்ற மாணவர்களை UiTM பல்கலைக்கழகம் தற்காத்ததோடு அவர்களின் அந்த செயல்பாடு ஒரு கல்வி கட்டமைப்பிற்குள் நடத்தப்பட்டதாக தெரிவித்திருந்தது.