
கோலாலம்பூர், ஏப் 16 , Yayasan Mahir Malaysia தாமான் மெலாவாத்தி தமிழ்ப்பள்ளியின் பள்ளி மேலாளர் வாரியம் மற்றும் இப்பள்ளியின் முன்னாள் மாணவர் சங்கத்துடனும் இணைந்து ‘எதிர்கால நுட்பவியல் தொழிற்கல்வி & நுட்பவியல் விழா 2025’ எனும் நிகழ்வை அண்மையில் மெலாவாத்தி தமிழ்ப்பள்ளி ஏற்பாடு செய்திருந்தது.
இந்த விழாவில் தாமான் மெலாவாத்தி தமிழ்ப்பள்ளியில் பாலர் பள்ளி முதல் ஆறாம் ஆண்டு வரை பயிலும் 176 மாணவர்களுடன் சுமார் 80 பெற்றோர்களும் கலந்து கொண்டதோடு அவர்கள் அனைவரும் தொழில்நுட்பம் மற்றும் தொழிற்கல்வி பயிற்சியினைக் குறித்த விளக்கங்களைப் பெற்றனர்.
மெய்நிகர் சூழலோடு கூடிய ‘ட்ரோன்’ பயிற்சி, “ட்ரோன்’ குறித்த விளக்கங்கள், பல்லூடகக் கண்காட்சி, கணினியின் மென்பொருளின் அறிமுகம், மின்சார வாகனத்தின் தனித்தன்மை மற்றும் அதன் எதிர்காலம் குறித்த விளக்கம், PS5 விளையாட்டு அனுபவம், தொழிற்கல்வி மற்றும் தொழில்நுட்பக்கல்வியினால் உருவாகும் வேலை வாய்ப்புக்கான விளக்கவுரை என நான்கு மணி நேரம் தாமான் மெலாவாத்தியின் பள்ளிச்சூழலே உற்சாகமாகக் காணப்பட்டது.
Mahir அறக்கட்டளையின் இயக்குநர் டத்தோ ஹஜி நூருல் அரிபின் அப்துல் மஜித், இந்த விழாவை அதிகாரப்பூர்வமாகத் தொடக்கி வைத்தார்.
இந்தப் பயனுள்ள நிகழ்ச்சியை ஏற்பாடு செய்த பள்ளி மேலாளர் வாரியத்திற்கும், மலேசியா மாஹிர் அறக்கட்டளைக்கும் தனது மனமார்ந்த நன்றியை பள்ளியின் தலைமையாசிரியர் குணசேகரன் முனியாண்டி தெரிவித்துக் கொண்டார்.
இந்த நிகழ்ச்சி ஆண்டுதோறும் நடைபெற வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.
இந்நிகழ்ச்சியின் திட்ட இயக்குநர் திரு. அன்பரசன் குழந்தை, இந்த நிகழ்ச்சி பள்ளி மேலாளர் வாரியம், முன்னாள் மாணவர் சங்கம், ஆசிரியர்கள் ஆகியோரால் மாணவர், பெற்றோர் நலன் கருதி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதை தனது உரையில் தெரிவித்தார்.
இந்நிகழ்ச்சியில் பாலர் பள்ளி முதல் ஆறாம் ஆண்டு வரை பயிலும் மாணவர்களுக்குப் பல்வேறு பரிசுகள் வழங்கப்பட்டன.
அதோடு, பெற்றோர்களும் ஆசிரியர்களும் நிகழ்ச்சியின் இறுதியில் நடைபெற்ற தொழில்நுட்ப புதிர்போட்டியில் கலந்து கொண்டு பரிசுகளை வென்றனர்.
அதுமட்டுமன்றி, முன்பதிவு செய்த முதல் 100 மாணவர்கள் ஏற்பாட்டுக் குழுவினரிடமிருந்து சிறப்பு பரிசுகளைப் பெற்றனர்.
இந்த நிகழ்ச்சியில் உச்சக்கட்டமாக, பள்ளி மேலாளர் வாரியம், மாணவர்களிடையே தொழில்நுட்பம், தொழிற்திறன் ஆற்றலை மேம்படுத்துவதற்காக 50 மாணவர்களுக்கு ட்ரோன் மற்றும் கோடிங் பயிற்சி தொடங்கவுள்ளதாக அறிவித்தனர்.