Latestசினிமா

நடிகை சாய் தன்ஷிகாவுடன் காதல் திருமணத்தை உறுதிச் செய்த நடிகர் விஷால்; ஆகஸ்ட் 29-ல் கெட்டிமேளம்

சென்னை, மே-20 – நடிகர் விஷால் ஒரு வழியாக தனது திருமணத்தை உறுதிச் செய்துள்ளார்.

அவர் காதலித்து மணமுடிக்கப் போவது வேறு யாருமல்ல… கபாலி படத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் மகளாக நடித்து பிரபலமான நடிகை சாய் தன்ஷிகாவைத் தான்.

தனது புதியப் படமான ‘யோகி டா’ விழாவில் பேசிய போது தன்ஷிகாவே இதனை மேடையில் அறிவித்தார்.

மேடையில் அமர்ந்திருந்த விஷாலும் அதனை உறுதிப்படுத்தும் விதமாக வெட்கத்தில் சிரிக்க கைத்தட்டல் பறந்தது.

சினிமா, அரசியல், காதல், நடிகர் சங்கம் என சர்ச்சை பேச்சுகளாலும் பேட்டிகளாலும் அறியப்பட்டவரான 47 வயது விஷால், நீண்ட காலமாகவே திருமணத்தை தள்ளிப் போட்டு வந்தார்.

தான் பொதுச் செயலாளராக உள்ள தென்னிந்திய நடிகர் சங்கத்திற்கு சொந்த கட்டடத்தைக் கட்டியப் பிறகே திருமணம் என்றும் பேசி வந்ததார்.

இடையில் நடிகை வரலட்சுமி சரத்குமாரை காதலித்து திருமணப் பேச்சு வரை சென்று காதல் முறிவு ஏற்பட்டதும் திரையுலகமும் இரசிகர்களும் அறிந்ததே.

பின்னர் நடிகை லட்சுமி மேனனை விஷால் காதலிப்பதாகவும் கிசுகிக்கப்பட்டது.

நடுவில் அவரின் உடல்நலம் குறித்த செய்திகளும் முக்கியத்துவம் பெற்றன; ‘மதகஜராஜா’ பட விளம்பர விழாவில் கை நடுங்க, வாய் குளறி அவர் பேசியது பல சர்ச்சைகளை உருவாக்கியது.

கடந்த வாரம் கூட திருநங்கைகள் நடத்திய விழாவில் விஷால் மயங்கி விழுந்ததாக செய்திகள் வெளியாகின.

இந்நிலையில் அதற்கு விளக்கம் கொடுத்த விஷால், மது, சிகரெட் என எல்லா கெட்டப் பழக்கங்களையும் விட்டு 5 ஆண்டுகள் ஆகிவிட்டதாகவும், விரைவில் மீண்டு வருவேன் என்றும் கூறியிருந்தார்.

தற்போது நடிகர் சங்கக் கட்டடப் பணிகள் முடிந்து ஆகஸ்டில் திறக்கப்படவிருப்பதால், திருமணத் தேதியை அவர் முடிவுச் செய்திருப்பதாகக் கூறப்படுகிறது.

நடிகர் சங்க விஷயத்தில் கொடுத்த வாக்குறுதியைக் காப்பாற்றுகிறாரே என விஷாலுக்கு இரசிகர்கள் வாழ்த்துத் தெரிவித்து வருகின்றனர்

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!