
கோலாலம்பூர், மே-31 – 14 கிலோ கிராம் எடையிலான புதிய ஊதா நிற LPG வர்த்தக எரிவாயு தோம்பு பயன்பாடு கட்டாயமாக்கப்பட்டுள்ளதானது, மானியம் பெறப்பட்ட தோம்புகளையும் மானியம் பெறப்படாத தோம்புகளையும் வேறுபடுத்திக் காட்டவே.
அதோடு பாதுகாப்பை மேம்படுத்துவதும் முறைகேடுகளைத் தவிர்ப்பதும் அதன் நோக்கமாகும்.
மே 1 முதல் அமுலுக்கு வந்துள்ள இப்புதிய உத்தரவு, உண்மையிலேயே தகுதிப் பெற்றவர்களுக்கு மட்டுமே அரசாங்க மானியங்கள் கிடைப்பதை உறுதிச் செய்யும் நடவடிக்கையாகும்.
ஆனால் இதன் அமுலாக்கம் மக்கள் மத்தியில் சில கேள்விகளை எழுப்பியுள்ளதை நாம் மறுக்க முடியாது.
சிறு வியாபாரிகள் உள்ளிட்டோர் ஒரு LPG வர்த்தக எரிவாயுத் தோம்புக்கு 70 ரிங்கிட் முதல் போட வேண்டியுள்ளதாக அதிருப்திகள் எழுந்திருப்பதும் அதிலடங்கும்.
இதுநாள் வரை, உதவித் தொகை பெறப்பட்ட LPG எரிவாயுத் தோம்புகளுக்கு தலா 26 ரிங்கிட் 60 சென் மட்டுமே அவர்கள் செலுத்தி வந்துள்ளனர்.
இது அவர்களின் சுமையை அதிகரித்துள்ளது; குறிப்பாக தினசரி செயல்பாட்டு செலவினங்கள் நடப்பில் உள்ளதை விட 2 மடங்கு அதிகரிக்கும் என்பதே அவர்களின் கவலை.
இதை விட பெரும் கவலை என்னவென்றால், இந்த செலவின உயர்வு விநியோகச் சங்கிலியை பாதித்து, கடைசியில் பயனீட்டாளர்களின் தலையில் தான் வந்து விடியும்.
அதாவது உணவுகள் மற்றும் பானங்களின் விலைகள் 20 விழுக்காடு வரை உயரலாம் என அஞ்சப்படுகிறது.
எனவே, இந்த LPG எரிவாயு தோம்புகளின் பயன்பாட்டை நிறுத்தி வைக்குமாறு சிலரும், அதன் விலை மேலும் நியாயமான வகையில் இருக்கும் வகையில் திருத்தப்பட வேண்டுமென இன்னொரு சாராரும் வலியுறுத்தியுள்ளனர்.
பயனீட்டாளர்களான மக்களுக்குச் சுமை ஏற்படாத வகையில் அரசாங்கம் பார்த்துக் கொள்ள வேண்டுமென்பதே அக்கோரிக்கைகள் சொல்ல வரும் செய்தியாகும்.
செலவினம் ஒரு பக்கம் இருக்க, ஏன் இந்த ஊதா தோம்புகள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன என்ற குழப்பமும் மக்களிடையே காணப்படுகிறது.
எரிவாயு விலை உயருமோ என பலர் கவலையடைந்துள்ளனர்.
உண்மையில் ஒரு நேரத்தில் 3 LPG தோம்புகளைப் பயன்படுத்தும் ஹோட்டல்கள், பெரிய உணவகங்கள், தொழில்துறை சமையலறைகள் போன்றவை மட்டுமே இந்த வர்த்தக LPG எரிவாயுத் தோம்புகளுக்கு மாறுவது கட்டாயமாகும்.
தெளிவான விளக்கம் இல்லையென்றால் இவ்விஷயத்தில் குழப்பம் நீடிக்கும்.
எனவே மக்களுக்கு உரிய விளக்கத்தை அளித்து தேவையற்ற கவலையைப் போக்குவது அரசாங்கத்தின் கடமையாகும்