
கோண்டோமர், போர்த்துக்கல், ஜூலை 5 – கடந்த வியாழக்கிழமை ஸ்பெயினில் ஏற்பட்ட கார் விபத்தில் இறந்த முன்னாள் லிவர்பூல் கால்பந்து வீரர் டியோகோ ஜோட்டா (Diogo Jota) மற்றும் அவரது சகோதரர் ஆண்ட்ரே சில்வா (Andre Silva) ஆகியோரின் உடல்கள், நேற்று அவர்களது சொந்த ஊரிலுள்ள தேவாலயத்திற்குக் கொண்டு வரப்பட்டதைத் தொடர்ந்து நூற்றுக்கணக்கானோர் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
28 வயது நிரம்பிய ஃபார்வர்ட் ஜோட்டாவின் மரணம் கால்பந்து உலகத்தையே உலுக்கியுள்ள நிலையில் முன்னாள் அணி வீரர்கள், கிளப்புகள், தேசியத் தலைவர்கள் மற்றும் ரசிகர்கள் தொடர்ந்து பூக்கள் மற்றும் மெழுகுவர்த்திகளை ஏந்தி வந்து தங்களின் அஞ்சலிகளைச் செலுத்தி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த 2 காற்பந்து வீரர்களின் இறுதி சடங்கு இன்று தேவாலயத்தில் நடைபெறவிருக்கும் நிலையில், டியோகோவோடு ஒன்றாக காற்பந்து அணியில் இருந்த மற்ற வீரர்கள் தங்களின் அணியில் இதன் பிறகு டியோகோ இருக்க மாட்டார் என்பதை ஏற்றுக்கொள்ள இயலவில்லை என்று உள்ளூர் ஊடகங்களிடம் மிகுந்த வேதனையுடன் பகிர்ந்துக் கொண்டுள்ளனர்.
நாம் எங்கிருந்து வருகிறோம் என்பது முக்கியமல்ல, எங்கு செல்கிறோம் என்பதுதான் முக்கியம் என்ற கருப்பொருளுக்கிணங்க இயங்கி வரும் டியோகோ ஜோட்டா தோற்றுவித்த குழந்தைகள் அகாடமியிலும் பொதுமக்கள் மெழுகுவர்த்திகள் மற்றும் பூக்களை வைத்து தங்களின் அஞ்சலியைச் செலுத்தி வருகின்றனர்.
சுமார் 160,000 மக்கள் வசிக்கும் கோண்டோமரில், இந்த 2 பிரபல காற்பந்து வீரர்களின் திடீர் மரணத்தை ஏற்றுக்கொள்ள முடியாமல் மக்கள் தவித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.